மகாபாரதம் பகுதி-8 - Mahabharatham story in Tamil

 நாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த குழந்தைக்கு மீனவன் என்று பெயர் வைத்தான். பெண் குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டான். அவளுக்கு யோஜனகந்தி என பெயரிட்டு நான் வளர்த்தேன். அவள்தான் இப்போது உங்களுக்கு மனைவியாகப் போகிறவள். இவளைமீனவப் பெண் என நினைக்க வேண்டாம். உங்களுக்கே உரித்தான அரசர்குலத்தில்தான் பிறந்தவள்.


எனவே இவளை நீங்கள் தயக்கமில்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம். இன்று மிகச்சிறந்த முகூர்த்தநாள். இந்த நாளிலேயே இவளை ஏற்றுக்கொள்ளுங்கள், என செம்படவர் தலைவன் சொல்லி முடித்தான். அன்றைய தினமே சந்தனுவுக்கும் யோஜனகந்திக்கும் திருமணம் நடந்தது. தந்தையார் புதிய மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தியதால், அரசபதவியை பீஷ்மர் ஏற்றுக்கொண்டார். அவரது அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில ஆண்டுகளில் யோஜனகந்திக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவருமே சூரியனையும் சந்திரனையும் போன்று ஒளிமிக்கவர்களாக திகழ்ந்தனர். ஒருவனுக்கு சித்ராங்கதன் என்றும், மற்றொருவனுக்கு விசித்திர வீரியன் என்றும் பெயரிட்டனர்.

தன் சித்தி பெற்றெடுத்த புத்திரர்களை தன் உடன்பிறந்தவர்களாக கருதி பீஷ்மர் அவர்களுக்கு போதிய கல்வியறிவை புகட்டினார்.இதனிடையே சந்தனு இறந்து போனான். சித்தி பெற்றெடுத்தமக்களில் மூத்தவன் சித்ராங்கதனுக்கு பீஷ்மர் முடிசூட்டினார். சித்ராங்கதன் மானிட பிறப்பாக பூமியில் இருந்தாலும் இதே பெயரைக் கொண்ட கந்தர்வன் ஒருவன் வானலோகத்தில் சுற்றிவந்தான். அவனுக்கு தன் பெயரைக்கொண்ட சித்ராங்கதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தான். ஆனால் பீஷ்மர் மீதிருந்த பயத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருமுறை மிகவும் தந்திரமாக அரண்மனைக்குள் சென்று சித்ராங்கதனைக் கொன்றுவிட்டான்.மகன் இறந்த துக்கத்தில் யோஜனகந்தி மிகவும் துயருற்றாள். வேறு வழியின்றி இரண்டாவது தம்பி விசித்திரவீரியனுக்கு முடிசூட்டப்பட்டது. இந்த நேரத்தில் தங்கள் வம்சத்தைப் பெருக்கிடும் வகையில் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்துவைக்க பீஷ்மர் எண்ணினார். அப்போது காசியை ஆண்ட மன்னன் காசிராஜன் தன் மூன்று புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோருக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தான். இதற்காக சுயம்வர அறிவிப்பையும் வெளியிட்டிருந்தான். தம்பியையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் சுயம்வரத்திற்கு சென்றார்.

நீண்ட தூரம் பயணம் செய்ததால் பீஷ்மர் கங்கைக்கரையில் மிகுந்த களைப்புடன் தங்கினார். அப்போது பீஷ்மரின் தாய் கங்காதேவி நதியிலிருந்து எழுந்து வந்தாள். தன் மகனின் களைப்பைப் போக்கும் வகையில் தண்ணீர் துளிகளை அவர்மேல் தெளித்தாள். பீஷ்மர் தாயை வணங்கிவிட்டு காசி போய் சேர்ந்தார். காசி மன்னனுக்கு பீஷ்மரின் திறமை பற்றி நன்றாக தெரியும். எனவே மற்ற மன்னர்களை வரவேற்றதைவிட பீஷ்மருக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்றான்.அங்கு வந்திருந்த மற்ற மன்னர்களுக்கு மனதில் சந்தேகம் ஏற்பட்டது.

காலம் முழுவதும் திருமணமே செய்யமாட்டேன் என விரதம் பூண்டிருந்த பீஷ்மருக்கு இங்கு என்ன வேலை? இங்கு சுயவரமல்லவா நடக்கிறது என்பதே அந்த சந்தேகம்.ஒவ்வொருவரும் பீஷ்மரின் பராக்கிரமம் பற்றி பேசியது மூன்று சகோதரிகளின் காதிலும் விழுந்தது. அவர்களில் அம்பா நீங்கலாக மற்ற இரு சகோதரிகளும் பீஷ்மரையே திருமணம் செய்துகொண்டால் என்ன என எண்ணினர். ஆனால் பீஷ்மருக்கு வயதாகிவிட்டது என்ற விஷயம் அவர்களுக்கு தெரியாது. சுயம்வர மண்டபத்திற்கு மாலையுடன் வந்த அவர்கள் பீஷ்மரைத் தேடினர்.


பீஷ்மர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டதும் அவர் அருகில் சென்று பார்த்தபோது தாடி, மீசையுடன் வயதாகிப் போயிருந்ததைப் பார்த்து பின் தங்கினார்கள். விசித்திரவீரியனை அவர்கள் விரும்பவில்லை.அவர்கள் தயங்குவதைக் கண்டு பீஷ்மர் ஓரளவு யூகித்துக்கொண்டார். உடனே மூன்று பெண்களையும் அரண்மனைக்கு வெளியே இழுத்துவந்தார். மற்ற நாட்டு மன்னர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். யாரையும் பிடிக்காமல் இந்த பெண்கள் பின்வாங்குகின்றனர்.

இந்த சமயத்தில் பீஷ்மர் அவர்களை இழுத்துச் செல்கிறார் என்றால் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என பொருமினர்.பீஷ்மரை பின்தொடர்ந்து எல்லா மன்னர்களும் விரட்டினர்.வில்வித்தையில் கைதேர்ந்தவரான பீஷ்மர் பாணங்களால் அந்த மன்னர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினார். பிறகு அஸ்தினாபுரம் வந்துசேர்ந்தார். அந்த பெண்களில் ஒருத்தியான அம்பா கண்ணீருடன் காணப்பட்டாள்.மகளே! நீ எதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் மற்ற சகோதரிகளிடம் இதுபோன்ற வருத்தம் காணப்படவில்லையே! என் தம்பி விசித்திரவீரியனுக்காகவே நான் சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன்.

அவனைத் திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதம்தானே! என்றார்.அவள் கண்ணீரைப் பெருக்கி, நான் தங்களின் சகோதரனை திருமணம் செய்துகொள்ள இயலாது. ஏனென்றால் நான் சாளுவ தேசத்து அரசன் பிரம்மதத்தனை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தை என் தந்தை தகர்த்துவிட்டார். அவருடைய கட்டாயத்துக்காகவே சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். ஆனால் நீங்களோ என்னைக் கடத்தி வந்துவிட்டீர்கள். என்னை அவரிடமே அனுப்பி வைத்துவிடுவீர்களா? என கேட்டாள்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ