Don’t fall for Illusion - sweet words ...
விஷ வலையில் விழாதீர்கள்...
ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. "மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்." அந்த ஈயும் தாயின் அறிவுரையைக் கேட்டு பளபளப்பான ஒட்டும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது.
ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சி
னை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாய் அனாவசியமாக பயப்பட்டதாகத் தோன்றியது.
அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த ஈ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெள்ள அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று வந்தது. பிரச்சினை எதுவுமில்லை. சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடியது. மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை.
அந்தக் காகிதத்தில் அப்படியே ஈக்கள் உட்கார்ந்து அனாயாசமாக போவதைப் பார்த்த அந்த ஈயிற்குத் தன் அனுபவமும் சேர்த்து யோசிக்கையில் இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. பகட்டும் பளபளப்பும் நிறைந்த அந்தக் காகிதத்தில் அமர்ந்து விளையாடுவது ஜாலியாக இருந்தது. போய் சற்று அதிக நேரம் தங்கி வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மிக களைப்படைந்து விட்ட ஈ அப்படியே உறங்கி விட்டது. அது விழித்த பிறகு பறக்க நினைத்த போது ஒரு இறகு அந்த காகிதத்தில் நன்றாகவே ஒட்டிப் போயிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. அந்தக் காகிதத்தில் இருந்து அந்த ஈ தப்பிக்க முடிந்தாலும் கூட அந்த ஒட்டி போன இறகை இழந்தேயாக வேண்டும்.
அது இறகை இழந்ததா, இல்லை வாழ்க்கையையே இழந்ததா என்று நாம் ஆராயப் போவதில்லை.
நாம் ஆராயப் போவதெல்லாம் அந்த ஈக்கு அந்தக் காகிதத்தின் மீது சென்று அமரும் அவசியம் இருந்ததா என்பதை மட்டும் தான். அந்த அவசியம் இருக்கவில்லை என்பதே உண்மை. அது ஆபத்தானது என்பதையும் அது தந்தையின் உயிரையே குடித்தது என்பதையும் ஈ முன்பே அறிந்திருந்தது. ஆனால் அந்தக் காகிதத்தின் பளபளப்பு, போய் ஓரிரு தடவை ஒன்றும் ஆகவில்லை என்கிற தைரியம், மற்றவர்களும் செய்கிறார்கள் என்ற சமாதானம், ஜாலியாக இருக்கிறது என்கிற எண்ணம் எல்லாமாக சேர்ந்து அதன் அறிவை மழுங்கடித்து ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.
"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்"
என்கிறது திருக்குறள்.
தீ தான் சார்ந்திருக்கும் பொருளை எல்லாம் சாம்பலாக்கும் வல்லமை படைத்தது. அந்தத் தீயை விட ஆபத்தான தீயவை இருக்கின்றன என்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் சொல்கிறது திருக்குறள்.
உலகில் அந்த பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதத்தைப் போன்ற தீய விஷயங்கள் பல இருக்கின்றன. சூதாட்டம், போதைப் பழக்கம், தகாத உறவு வைத்துக் கொள்ளல் போன்ற எத்தனையோ வலைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அது போன்ற வலையால் பெரிய தீங்கு ஏற்படாத நிலைமை கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அதில் தங்க ஆரம்பிக்கும் போது உங்களை உடும்புப்பிடியுடன் அந்த வலை உங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெரும் சேதத்தையோ, நாசத்தையோ ஏற்படுத்தாமல் அந்த விஷ வலை உங்களை தப்பிக்க விடாது.
வாழ்க்கையில் பல விஷயங்கள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் நாம் அப்படி நினைக்கத் தவறுவது தான் பல வருத்தங்களுக்கு மூல காரணமாக உள்ளது. அந்த ஈயின் இயல்பான வாழ்க்கைக்கு எப்படி அந்த பளபளப்புக் காகிதம் எந்த விதத்திலும் தேவையாக இருக்கவில்லையோ, அப்படியே நாம் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ முன்பு குறிப்பிட்டது போன்ற தீய வலைகள் தேவையில்லை.
இப்படி ஏதாவது ஒரு வலை உங்கள் வாழ்க்கையில் கவர்ச்சியை ஏற்படுத்துமானால் இந்த ஈ கதையை நினைவுபடுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக விலகிச் செல்லுங்கள்.
Comments
Post a Comment