எந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் இரண்டாவது வருமானம் பார்க்க முடியும்?


கடும் உழைப்பு, நேர மேலாண்மை என்று பொதுவான ஒரு பதிலை கொடுத்து ஜல்லி அடிக்க விரும்பவில்லை. எனக்கு எப்பொழுதும் Measurable Results என்பதில் தான் நம்பிக்கை உண்டு.

உங்கள் இளம் பிராயத்தில் விளையாட்டாய் கற்றுக் கொண்ட சில விஷயங்கள் உங்களுக்கு இரண்டாவது வருமானத்துக்கு பிள்ளையார் சுழி போடலாம்.
ஆனால் அந்த திறமையை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம். அப்பொழுது தான் "நாங்க இருக்கோம், நம்பி வாங்க!" என்று மற்றவரையும் நீங்கள் நம்ப வைக்க முடியும்.
சரி வாங்க, பதிலுக்கு போவோம்.

1.ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பானிய மொழி என்று ஏதாவது ஒன்று சான்றிதழ் பெற்றிருந்தால், மாலை நேரத்தில் மொழி ஆசிரியராகி விடலாம். ஸ்கைப்பிலேயே பாடம் எடுத்து டாலரில் சார்ஜ் செய்யலாம்.
எனக்கு தெரிந்த ஒருவர் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராக முழு நேர பணியே செய்தார்.

2. நீங்கள் சிலம்பம், களரி என்று தெரிந்து வைத்திருந்தால், நான்கு நண்பர்களுடன் ஒரு சிறிய பயிற்சி நிறுவனத்தை தொடங்கி விடலாம்.
அமெரிக்க நேரத்துக்கு நீங்கள் சிலம்ப ஆசானாக மாறி, நிஜமாகவே கம்பு சுத்தலாம். வரும்படியும் வரும். மாதம் 50 டாலர் - 50 மாணவர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

3. சிறு பிராயத்தில் தபலா, மிருதங்கம், டிரம்ஸ், கிதார் என்று இசைக் கருவி நன்கு இசைக்க தெரிந்திருந்தால் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாம்.

4. பாலிவுட், டோலிவுட் டான்ஸ் எல்லாம் காலேஜில் ஆடியதுண்டா? வீட்டு மொட்டை மாடியில் ஒரு டான்ஸ் வகுப்பு ஆரம்பித்து விடுங்கள்.
ஒரு லேடி அசிஸ்டெண்டும் உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள். நாளடைவில் பிக்கப் ஆகி விடும். நான் நடன வகுப்பை சொன்னேன்.
நீங்களும் ஏரியாவுக்கே மாஸ்டராகி விடுவீர்கள்.

5. அழகா டிசைன் டிஸைனா கோலம் போட தெரியுமா? சில கல்யாண கான்டிராக்டர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கல்யாண மண்டபத்தில் அரை மணி நேரம் கோலம் போட்டால் 500 ரூபாய்.
சித்திரை முதல் தை வரை தினமும் ஒரு கோலம், உங்கள் வாழ்வில் ஒரே கோலாகலம் தான்.
அதேபோல தான் மெஹந்தி எனப்படும் மருதாணி வைப்பது, Bridal Makeup - ஆயிரம் நிச்சயம், இரண்டாயிரம் லட்சியம்.
நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு அஜந்தா கடிகாரமோ டீ கப் & சாசரோ பரிசளித்து விட்டு அப்படியே டிபனோ, டின்னரோ சாப்பிட்டு வந்து விடலாம்.

6. புகைப்பட கலையில் ஆர்வம் உண்டா? நல்லதா ஒரு DSLR காமிரா வாங்கி கொள்ளவும். இப்போதெல்லாம் டிரோன் வைத்து Candid shots எடுக்கிறார்கள். ஒரு கல்யாண கான்டிராக்டரின் ஆஸ்தான புகைப்பட கலைஞராகி விட்டால் போதும்.
வீடியோ, புகைப்படத்துக்கு ஒரு கல்யாணத்தில் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள்? என்று வெளியில் கொஞ்சம் விசாரியுங்கள். பார்க்கும் முதலாவது வேலையை விட்டு விடுவீர்கள்.

7. பள்ளி, கல்லூரி காலங்களில் வாயை மூடாமல் பேசுபவரா? சுவாரசியமாக எந்தவொரு விஷயத்தையும் சுருங்க சொல்லி விளங்க வைக்க முடியுமா? யூடியூப் சானல் ஆரம்பித்து விடுங்கள். கையளவு தொழில் நுட்பமும் கத்துக்கணும்.
நான் மேலே சொன்னது எல்லாம் unconventional Methods.
"எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்" என்று கால் கட்டை விரலால் கோலம் போடுபவர்களுக்கு சரிப்படாது. உங்கள் கூட்டுக்குள்ளிருந்து வெளியே வாருங்கள், உலகம் ரொம்ப பெருசு.
பைனான்ஸ், Stocks இதிலெல்லாம் ஆர்வமா? கொஞ்சமா பணம் முதலீடு செய்து வெள்ளோட்டம் பாருங்கள்.
எனக்கு தெரிந்த ஒரு சீனர், தனது சம்பளத்தை விட பங்கு சந்தையில் அதிகமா சம்பாதிக்கிறார். ஆனால் ஒழுங்கா நீச்சல் கற்றுக் கொண்டு கடலில் இறங்கணும்.

பி.கு: எவ்வளவு சம்பாதித்தாலும் மனதில் திருப்தியை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ