மிளகு, காபி, வாழை, கிராம்பு, காய்கறிகள்... சிங்கப்பூர் to கொல்லிமலை
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை தமிழகத்தின் புகழ்பெற்ற மலை வாசஸ்தலம். மலை அடிவாரமான காரவள்ளி யில் இருந்து மேல் நோக்கி 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால், கொல்லி மலையை அடையலாம். இங்குள்ள சோளக்காடு பேருந்து நிலையத்திலிருந்து, படகு இல்லம் வழியே 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வாசலூர் பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்தத் தம்பதியின் தோட்டம்.
விவசாயத்தில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத இவர்கள், அதுவும் மலைப்பிரதேசத்தில் தங்களுடைய கடும் உழைப் பாலும், தன்னம்பிக்கை யாலும் இங்கு வெற்றிகர மாக விவசாயம் செய்து வருகிறார்கள். இவர் களுடைய தோட்டத்தில் மிளகு, காபி, வாழை, கிராம்பு, பழ மரங்கள், காய்கறிகள் எனப் பலவித மான பயிர்கள் செழிப்பாக விளைந்துகொண்டிருக்கின்றன.
ஒரு பகல்பொழுதில் இத்தோட்டத்துக்குச் சென்றோம். இவர்களுடைய வீடும் இங்கு தான் அமைந்துள்ளது. விளைபொருள்களைப் பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு அனுப்பும் பணியில் மும்மூரமாக ஈடுபட்டிருந்த இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றனர்.
தங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்து முன்னுரை கொடுத்தார் புனிதா, “என்னோட ஊர் கோயம்புத்தூர். இவர் சேலத்துக்காரர். நாங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல ஒரே கல்லூரியில இன்ஜினீயரிங் படிச்சோம். அப்பதான் எங்க ரெண்டு பேருக்கும் அறிமுகம் ஏற்பட்டுச்சு. அதுக்குப் பிறகு, சென்னையில தனியார் மென்பொருள் கம்பெனியில ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செஞ்சோம். காதல் திருமணம் செஞ்சுகிட்டோம். திருமணத் துக்குப் பிறகு சிங்கப்பூர்ல பத்து வருஷம் மென்பொருள் நிறுவனத்துல வேலை பார்த்தோம். கைநிறைய பணம் சம்பாதிச்சோம். ஆனா, அந்த வேலையிலயும் அங்கவுள்ள பரபரப்பான வாழ்க்கைச் சூழல்லயும் எங்களுக்கு மனநிறைவு ஏற்படலை. ஒரு கட்டத்துல தமிழ்நாட்டுக்கே போயிடலாம்னு முடிவெடுத்தோம். மக்கள் கூட்டம் அதிக மில்லாத, இயற்கை சூழ்ந்த அமைதியான இடத்துலதான் வசிக்கணும்னு விரும்பினோம்.
2008-ம் வருஷம் இங்க முதன்முறையா சுற்றுலா வந்தப்பவே, கொல்லிமலை எங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அதனால இங்கயே இடம் தேடி அலைஞ்சு நாலேகால் ஏக்கர் நிலத்தை வாங்கி, 2010-ம் வருஷம் குடியேறினோம்” என்றவரை தொடர்ந்து நம்மிடம் பேசிய வினோத்குமார், “இந்த வாழ்க்கை முறைக்கு நாங்க பழகினது, விவசாய வேலைகளைக் கத்துகிட்டதெல்லாம் சுவாரஸ்யமான அனுபவம். முதல்கட்டமா இந்த நிலத்துலயே வீடு கட்டி தங்கினோம். விவசாயம் பத்தி அப்போ எங்களுக்கு எதுவுமே தெரியாது. இங்கயிருந்து நாமக்கலுக்குப் போய்த் தவறாம பசுமை விகடனை வாங்கிட்டு வந்து படிப்போம். அது மூலமாதான் சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் விவசாய முறைகளைத் தெரிஞ்சுகிட்டோம். இந்தப் பகுதி விவசாயிங் களைச் சந்திச்சு, அவங்களோட அனுபவங் களையும் கேட்டு இங்கவுள்ள சூழலுக்கு ஏத்தபடி விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம்.
நாங்க இந்த நிலத்தை வாங்கினப்பவே ரெண்டு ஏக்கர்ல மிளகும் காபியும் பயிர் செய்யப்பட்டு இருந்துச்சு. ஆனா, எந்தவித பராமரிப்பு இல்லாம கிடந்துச்சு. இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்து மாடு ஒண்ணு வாங்கினோம். எரு, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் கொடுத்து, அந்த ரெண்டு ஏக்கர்ல ஏற்கெனவே இருந்த பயிர்களை வளப்படுத்தினோம்.
மிளகுக் கொடிகளுக்கு, சில்வர் மரங்கள்தான் கொடிக்கால்
புதர்களா கிடந்த மீதி 2 ஏக்கர் நிலத்தைச் சீரமைச்சு மிளகு சாகுபடி செய்றதுக்கான ஆரம்பகட்ட வேலைகள்ல இறங்கினோம். இந்தப் பகுதி விவசாயிங்க பெரும்பாலும், மிளகுக் கொடிகளை ஏத்திவிட, கொடிக் காலுக்கு சில்வர் ஓக் மரங்களை வளர்த்து பயன்படுத்துறாங்க. அதே முறையைத்தான் நாங்களும் கடைப்பிடிச்சோம். 10 - 16 அடி இடைவெளியில சில்வர் ஓக் மரக் கன்றுகளை நடவு செஞ்சு வளர்த்தோம்.
சமவெளிப் பகுதி மாதிரி இங்க சீரான இடைவெளி கடைப்பிடிக்க முடியாது. அங்கங்க கரடு முரடான பாறைங்க, நிறைய மேடு பள்ளங்கள் இருக்கும். சில்வர் ஓக் கன்றுகளை நடவு செஞ்ச மூணாவது வருஷம், மிளகு பயிர் பண்ணி, கொடிகளை அதுல ஏத்திவிட்டோம். ஒவ்வொரு சில்வர் ஓக் மரத்தைச் சுத்தியும் அடிப்பகுதியில 5 விதைக்கொடிகளை ஊன்றி, அதுல நல்லா திடகாத்திரமா, செழிப்பா தேறி வந்த 2 - 3 கொடிகளை மட்டும் சில்வர் மரத்துல ஏத்தி விட்டோம். கொல்லிமலைன்னு சொன்னாலே மிளகுதான் எல்லாருக்கும் முதல்ல ஞாபகத்துக்கு வரும். மலைப்பகுதிகள்ல நல்ல விளைச்சல் தரக்கூடிய பயிர். எங்க தோட்டத்துல செழிப்பா விளைஞ்சு நிறைவான மகசூல் கொடுக்குது’’ என்று சொன்னவர், தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தபடியே மிகுந்த ஆர்வத்துடன் மற்ற தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
பன்னியூர், கரிமுண்டா ரகங்கள்
‘‘இந்த நாலு ஏக்கர் நிலத்துல 800 சில்வர் ஓக் மரங்கள்ல, 800 தொகுப்புகளா, மிளகுக் கொடிகள் இருக்கு. இதெல்லாம் கேரளாவைச் சேர்ந்த பன்னியூர், கரிமுண்டா ரகங்கள். இதுல ஊடுபயிரா... அரபிக்கா ரகத்தைச் சேர்ந்த 600 காபி மரங்கள் இருக்கு. கற்பூர வள்ளி, மலைவாழை ரகங்கள்ல ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் இருக்கு. 50-க்கும் அதிகமான பலா மரங்களும் இங்க இருக்கு.
கொய்யா, சீத்தா, மா, ரோஸ் ஆப்பிள், அவகடோ கிராம்பு, இஞ்சி, வெண்ணிலா உட்பட பலவிதமானபயிர்கள் இங்க இருக்கு.
மண்ணை வளப்படுத்தும் மூடாக்கு, எரு, ஜீவாமிர்தம்
இங்கவுள்ள மரங்கள், செடி, கொடிகள்ல இருந்து உதிரக்கூடிய இலைதழைகளை இங்கயே போட்டு மூடாக்கா பயன்படுத்திக் குறோம். இது மட்கி உரமாகி, மண்ணை வளப்படுத்துது. ரசாயனம்ங்கிற பேச்சுக்கு இடம் கிடையாது. எருவும் ஜீவாமிர்தமும் தொடர்ச்சியா கொடுக்கிறோம். இதனால் மண்ணு நல்லா வளமாகிக்கிட்டே இருக்கு. பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இல்லாம, இங்கவுள்ள பயிர்கள் ஆரோக்கியமா வளர்ந்துட்டு இருக்கு.
தற்சார்பு வாழ்க்கைதான் எங்களுடைய இலக்கு
வருஷத்துக்கு 400 கிலோ மிளகு கிடைக்குது. ஒரு கிலோ 750 ரூபாய்னு விற்பனை செய்றோம். வருஷத்துக்கு 200 கிலோ காபிக்கொட்டைகள் கிடைக்குது. அதை அப்படியே பருப்பா பத்திரப்படுத்தி வெச்சிருந்து, வெளியூர் ஆர்டரைப் பொறுத்து, காபித்தூளா மதிப்புக்கூட்டி, ஒரு கிலோ 600 ரூபாய்னு விற்பனை செய்றோம். 150 கிராம்பு மரங்கள் வெச்சிருக்கோம். அதுல வருஷத்துக்கு 20 கிலோ கிராம்பு கிடைக்குது. அதை கிலோ 1,250 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். வாழைத்தார்கள் விற்பனை மூலமாவும் கனிசமான வருமானம் கிடைக்குது. மிளகு, வாழை, கிராம்பு உட்பட எங்க விளை பொருள்கள் எல்லாத்தையுமே டெம்போ வேன்ல ஏத்தி நாமக்கலுக்குக் கொண்டுபோயி, அங்கயிருந்து பஸ் மூலமா சென்னையிலே இருக்கிற இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பிடுவோம்.
ஆரம்பகாலத்துல சில வருஷங்கள் லாபமே கிடைக்கலை. நாங்க எற்கனவே மென்பொருள் நிறுவனத்துல வேலைபார்த்து, சம்பாதிச்சு வச்சிருந்ததை வச்சிதான் எங்களோட குடும்பச் செலவுகளைச் சமாளிச்சோம். இப்போ சில வருஷங்களாதான் ஓரளவுக்கு வருமானம் கிடைக்குது. மூணு வேலை ஆளுங்க இருக்காங்க. எல்லாச் செலவுகளும் போக, வருஷத்துக்கு நாலு லட்சம் ரூபாய் லாபமா கிடைச்சுக்கிட்டு இருக்கு. இது குறைவான லாபம்தான். ஆனாலும் ரொம்பவே சந்தோஷமா மனநிறைவோடு இங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம். எங்களுக்கு வருமானம் நோக்கம் இல்லை. தற்சார்பு வாழ்க்கைதான் எங்களோட இலக்கு.
சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்னு இங்க பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வாய்ப்புக் கிடையாது. எங்க ரெண்டு பசங்களும் இங்கவுள்ள ஸ்கூல்லயே படிக்கிறாங்க. அதனால, வர்ற வருமானத்தை வெச்சு நிறைவா வாழ முடியுது. எங்களுக்கு எதிர்காலத்தைப் பத்தின பெரிய எதிர் பார்ப்புகள் எல்லாம் கிடையாது. ஆனால், இந்தத் தோட்டம் எங்க பசங்களோட எதிர்காலத்துக்கு மிகப் பெரிய அளவுல கைகொடுக்கும்’’ என்றார்.
தொடர்புக்கு,
மின்னஞ்சல்: ponvanam@hotmail.com
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
மிளகு சாகுபடி குறித்து வினோத்குமார் – புனிதா தம்பதி கூறிய அனுபவங்கள், இங்கே பாடமாக....
செங்குத்தாக வளரும் இயல்புடையது, சில்வர் ஓக் மரம், சில ஆண்டுகளிலேயே அதிக உயரத்துக்கு வளரும். எனவே, மிளகுக்கொடி படர ஏதுவாக இருப்பதால் கொல்லிமலை விவசாயிகள் பெரும்பாலானோர் இந்த மரத்தையே தேர்வுசெய்கின்றனர். சில்வர் ஓக் கன்று நட்ட மூன்றாவது ஆண்டு, மிளகு பயிர் செய்து கொடிகளை ஏற்றிவிடலாம். இந்த மரத்தைச் சுற்றிலும் அடிப்பகுதியில் 4 - 5 கொடிகளை ஊன்ற வேண்டும். இவைகளில் 2 - 3 கொடிகள் நன்கு உயிர்ப்பிடித்துத் தரமாகத் தேறி வளர ஆரம்பிக்கும். அப்போது கொடியை மரத்தில் படரவிட வேண்டும். தேவைப்பட்டால், மிளகுக்கொடியில் மெல்லிய கயிறு ஒன்றைக் கட்டி, சில்வர் ஓக் மரத்தில் இணைத்துக் கட்டிவிடலாம். காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கொல்லிமலைப் பகுதியில் காற்றிலேயே ஈரப்பதம் இருப்பதால், அதிகமாகத் தண்ணீர் தேவைப்படாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும்.
இடுபொருள்கள்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பத்து லிட்டர் ஜீவாமிர்தத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு தொகுப்புக்கு 5 லிட்டர் வீதம் இக்கரைசலை மிளகு கொடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை... ஒரு தொகுப்புக்கு தலா மூன்று கிலோ எரு கொடுக்க வேண்டும். நடவு செய்த மூன்றாவது வருடத்தில் மிளகு காய்க்க ஆரம்பிக்கும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு படிப்படியாக மகசூல் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
காய்கள் ஆரம்பத்தில் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். இளஞ்சிவப்பு நிறமாக மாற ஆரம்பித்ததும் காய்களைப் பறித்து விட வேண்டும். சரியாக வளராத கொடியை அப்புறப்படுத்திவிட்டு, புதிய கொடியை நடவு செய்ய வேண்டும். முறையாகப் பராமரித்தால் 20 வருடங்கள் வரை மிளகுக் கொடியில் மகசூல் எடுக்கலாம். அறுவடையான மிளகினை வெந்நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்த வேண்டும்.
இயந்திரத்தின் (Thresher machine) உதவியுடன் காம்பு மற்றும் மிளகைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். 80 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்குத் தண்ணீரைச் சூடுபடுத்தி, அதில் மிளகை ஒரு நிமிடம் ஊற வைத்து, அதன் பிறகு வெயிலில் உலர்த்த வேண்டும். அடுத்த சில மணிநேரத்தில் மிளகு கறுப்பாக மாறத்தொடங்கும். தொடர்ந்து சில தினங்களுக்கு வெயிலில் உலர்த்தி, அவ்வப்போது கிளறி விட வேண்டும். பிறகு, தரமான மிளகைப் பிரித்தெடுத்து, காற்றுப்புகாத வகையில் மூடிவைத்து இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
ஊடுபயிராக காபி, வாழை
‘‘வாழைத்தார்களுக்கு உள்ளூர்ல கட்டுப்படியான விலை கிடைக்காததால, எங்க தோட்டத்து வாழைத்தார்களைச் சென்னையில இருக்குற சில அங்காடிகளுக்கு அனுப்ப ஆரம்பிச்சோம். கொல்லிமலை பருவநிலைக்குக் காய்கறிகள் நல்லா விளையும். ஆனா அதை மொத்தமா விற்பனை செய்றதுல நிறைய சவால்கள். அதனால, மிளகு, காபி, வாழை மட்டுமே அதிகம் கவனம் செலுத்துறோம். வீட்டுத் தேவைக்கு மட்டும் காய்கறி சாகுபடி செஞ்சிக்குறோம்” என்கிறார் வினோத்குமார்.
இன்னும் 10 ஏக்கர் நிலம்!
“கொல்லிமலையில குளிரும் வெயிலும் ஓரளவுக்குச் சரிசமமாதான் இருக்கும். இந்தப் பருவநிலைக்குப் பெரும்பாலான பயிர்கள் நல்லா வளரும். சோதனை முயற்சியா விவசாயிகள் பலரும் புதுப்புது பயிர்களை வளர்த்துப் பார்க்கிறாங்க. நாங்க இங்க குடியேறிய புதுசுல உள்ளூர் நர்சரியில 200 கிராம்பு கன்றுகளை வாங்கிக்கிட்டு வந்து நடவு பண்ணி வளர்க்க ஆரம்பிச்சோம். அதுல 150 மரங்கள் நல்லா தேறி வளர்ந்துவந்து விளைச்சல் கொடுக்க ஆரம்பிச்சது. நடவு செஞ்ச 5 - 7 வருஷத்துல இருந்து கிராம்புல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. 20 வருஷங்களுக்கு மேலான கிராம்பு மரங்கள்லதான் விளைச்சல் அதிகமா கிடைக்கும்னு இந்தப் பகுதி விவசாயிங்க சொல்றாங்க.
நம்பிக்கை அளிக்கும் வெனிலா
கொல்லிமலையில இப்போ ஏலக்காய் சாகுபடியும் கவனம் பெற்றிருக்கு. நாங்களும் முயற்சி பண்ணி பார்த்தோம். ஆனா, எங்க நிலத்துல ஏலக்காய் சரியா வளரல. ஆனா, வெனிலா பயிர் நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்க தோட்டத்துல சோதனை முயற்சியா, குறைவான எண்ணிக்கையில வெனிலா பயிர் பண்ணினோம். அது கொடி வகைப் பயிர். இப்ப ஒரு கொடியில இருந்து மட்டுமே வருஷத்துக்குப் பத்து காய்கள்வரை கிடைக்குது. வெனிலா காய் பீன்ஸ் மாதிரி இருக்கும். அதுக்குள்ள சதைப் பகுதியை எடுத்து, கேக், ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்திக்கிட்டோம்
எங்க ரெண்டு பேருக்குமே டிராக்டர் ஓட்டத் தெரியும்
இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சோலைக்கன்னிங்கிற ஊர்ல 10 ஏக்கர் நிலம் வாங்கி, அங்கயும் விவசாயம் செய்ய ஆரம்பிச்சிருக்கோம். மூணு ஏக்கர்ல மிளகு, பலா, வாழை பயிர் பண்ணியிருக்கோம். அங்கவுள்ள பயிர்கள் ஆரம்ப நிலையில இருக்கு. மீதி ஏழு ஏக்கர் நிலம் கரடுமுரடான பாறைகளா கிடக்கு. அதையெல்லாம் படிப்படியா சுத்தம் பண்ணிகிட்டிருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் டிராக்டர் ஓட்டத் தெரியும். மினி டிராக்டர் ஒண்ணு வெச்சிருக்கோம். அதை வெச்சு விவசாய வேலைகளைச் செஞ்சுக்கிறோம்’’ என்கிறார் புனிதா.
சில்வர் ஓக் மரங்களுக்கு மாற்றாகக்
கல்யாண முருங்கை
இப்பகுதி விவசாயிகள் மிளகு கொடிகளைப் படர விடுவதற்குக் கல்யாண முருங்கை மரத்தை வளர்க்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள். அதுகுறித்துப் பேசிய வினோத்குமார், “சில்வர் ஓக் இலைகள் உதிர்ந்து நிலத்துல மூடாக்கா பயன்படும். ஆனா, இந்த இலைகள் மட்குறதுக்கு ரொம்பவே காலதாமதம் ஆகுது. இதனால மழைநீர் முழுமையா மண்ணுக்குள்ள இறங்காம தடுக்கப்படுது. இந்தக் காரணத்துனால சில்வர் ஓக் மரங்களுக்கு மாற்றா, சில விவசாயிங்க கல்யாண முருங்கையை வளர்த்து அதுல மிளகுக் கொடிகளை ஏத்திவிட ஆரம்பிச்சிருக்காங்க. சோதனை முயற்சியா நாங்க 100 கல்யாண முருங்கை மரங்களை வளர்த்து, அதுல மிளகுக்கொடியை படர விட்டிருக்கோம். இதுல இருந்து உதிரக்கூடிய இலைகள், சீக்கிரத்துல மட்கி மண்ணுக்கு உரமாயிடும். காத்துல இருந்து நைட்ரஜனை அதிகமா கிரகிச்சு வேர் பகுதிக்குக் கொடுக்கும் தன்மை கொண்ட இந்தக் கல்யாண முருங்கை. அதனால மிளகுக்கொடிகளோட சிறப்பான வளர்ச்சிக்கு இது உறுதுணையா இருக்கும்னு சொல்லப்படுது. இதெல்லாம் உறுதியாகும் பட்சத்துல, கல்யாண முருங்கை மரங்களை இன்னும் அதிகமா வளர்க்கத் திட்டமிட்டிருக்கோம்” என்கிறார் நம்பிக்கையுடன்.
Comments
Post a Comment