முண்டு மிளகாய்... ராமநாதபுரத்தின் தனித்துவ அடையாளம்! புவிசார் குறியீடு வழங்கப்படுமா?


 


தமிழ்நாட்டில் விளையக்கூடிய மஞ்சள், மலைப்பூண்டு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனித்துவ அடையாளமாகத் திகழும் முண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என இம்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை எழுப்புகிறார்கள். தங்கள் மாவட்டத்தில் மட்டுமே நீண்டகாலமாக அதிகளவில் விளைவிக்கப்படும் முண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு கிடைத்தால், உலக அளவில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.


காரம், சுவை, மணம் அதிகம்


ராமநாதபுரம் முண்டு மிளகாயின் சிறப்புகள் மற்றும் இதற்கான புவிசார் குறியீடு பெறுவதற்கான அவசியம் குறித்து அறிந்து கொள்ள, இம்மாவட்டத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியனை சந்தித்துப் பேசினோம். ‘‘முண்டு மிளகாயில் காரத்தன்மை, சுவை, மணம் அதிகமாக இருக்கும். இது வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிராகும். இம்மாவட்டத்தில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய வட்டங்களில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிராக முண்டு மிளகாய் பயிரிடப்பட்டு வருகிறது. இது ராமநாதபுரம் மாவட்டத்தின் தனி அடையாளம். ஒரு ஏக்கர் முண்டு மிளகாய் சாகுபடிக்கு 10,000 ரூபாய் செலவு செய்தால் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும். இதற்குப் பராமரிப்புச் செலவு என்பது மிக மிகக் குறைவு.




மசாலா நிறுவனங்களை ஈர்த்த முண்டு


மசாலா பொடி தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய மசாலா பொடி வகைகள் மற்றும் மிளகாய் பொடிகளில் அதிகக் காரத்தன்மைகாக 80 சதவிகிதம் இந்த முண்டு மிளகாயை தான் பயன்படுத்துகின்றன. சிவப்பு நிறத்திற்காக மட்டும் 20 சதவிகிதம் மற்ற மிளகாய் ரகங்களைப் பயன்படுத்துகின்றன. இதனால் இந்த முண்டு மிளகாய்க்குத் தற்போது தேவை அதிகரித்துள்ளது.


மிளகாய்ப் பொடி உற்பத்தியாளர்கள் மத்தியில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு அதிக வரவேற்பு உள்ளதைக் கண்டறிந்த மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நறுமணப் பொருள்கள் வாரியத்துக்குக் கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, விவசாயிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அரசு தரப்பிலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.





புவிசார் குறியீடு


ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருள்களுக்குப் ‘புவிசார் குறியீடு’ அளிக்கப்படுகிறது. அந்தப் பொருளின் பிறப்பிடம், தனித்தன்மை ஆகியவற்றை அறிய, இந்தக் குறியீடு உதவும். இதனால் அந்தக் குறிப்பிட்ட பொருளின் பெயரில் போலிகள் உருவாவதை தடுக்க முடியும். அந்தப் பொருளை உலக அளவில் வர்த்தகம் செய்ய, சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் அந்தப் பொருள் உலக அளவில் புகழடைந்து, பெரும் வரவேற்பை பெறும். இதனால் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்து அதிக விலை கிடைக்கும். இதனால்தான் ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கக்கூடிய முண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. புவிசார் குறியீடு கிடைத்தால், இதன் சாகுபடி பரப்பு அதிகரிக்கும்’’ எனத் தெரிவித்தார்.



முண்டுல மூணு வகை


கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர், ‘‘பல தலைமுறைகளாக எங்க பகுதி விவசாயிங்க முண்டு மிளகாய் பயிர் பண்ணிக்கிட்டு வர்றாங்க. ராமநாதபுரம் மாவட்டத்துல மழையை மட்டுமே நம்பி, வெள்ளாமை செய்யக்கூடிய மானாவாரி நிலங்கள்தான் அதிகம். இதுல பெரும்பாலானவை கரிசல் மண் பூமி. இதுல முண்டு மிளகாய் சிறப்பா விளையும். இதுக்குத் தண்ணி அதிகமா தேவைப்படாது. முண்டு மிளகாய்ல மூணு ரகங்கள் இருக்கு... முண்டு, சட்டி முண்டு, நீள மூண்டு.. இந்த மூணு ரகங்கள்ல நீள முண்டு மிளகாயை எங்க பகுதி மக்கள் பச்சை மிளகாய்க்கு பயன்படுத்துவாங்க. சட்டி முண்டுங்கறது நல்லா பெருவெட்டா இருக்கும். அதைவிடக் கொஞ்சம் சின்னதா இருக்கக்கூடியதை, முண்டுனு சொல்வோம். முண்டு, சட்டி முண்டு இந்த இரண்டையுமே காய்ந்த மிளகாய் வற்றலுக்குத்தான் பயன்படுத்துவோம். மத்த மிளகாய் ரகங்களுக்கும் எங்க ஊர் முண்டு மிளகாய்க்கும் என்ன வித்தியாசம்னா, எங்க ஊர் முண்டு மிளகாய்ல, காரத்தன்மையும் சுவையும் கூடுதலா இருக்கும். இதனால மசாலா நிறுவனங்கள் இதைத்தான் அதிகமா பயன்படுத்துறாங்க. முண்டு மிளகாய் சாகுபடி செய்ய ரசாயன உரங்களே தேவையில்லை. நான் 4 ஏக்கர் மானாவாரி கரிசல்ல, இயற்கை முறையில முண்டு மிளகாய் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன்.




ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதைதான் தேவைப்படும். நிலத்துல ஆட்டுக்கிடை கட்டி உழவு ஓட்டி, விதைப்பு செஞ்சிட்டு, மேலுரமா பஞ்சகவ்யா, மீன் அமிலம் கொடுப்பேன். மிளகாய் சாகுபடியை பொறுத்தவரைக்கும் கொசு தொல்லை அதிகமா இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒட்டும் பசை அட்டைகளை அங்கங்க கட்டி தொங்கவிடுவேன், அதுல கொசுக்கள் உட்கார்ந்து அழிஞ்சிடும். முண்டு மிளகாயோட மொத்த பயிர் காலம் 5 மாதங்கள் இரண்டரை மாதங்கள்ல காய்ப்புக்கு வரும். அடுத்த இரண்டரை மாசம் மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு 600-800 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 180 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 500 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார்.


குழித்தட்டுகளில் நாற்று விநியோகம்


தோட்டக்கலைதுறை துணை இயக்குனர் நாகராஜனிடம் பேசினோம், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியப் பணப்பயிராக முண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு மானாவாரியில் 16,600 ஹெக்டேர் பரப்பிலும், இறவைப்பாசனத்தில் 1,950 ஹெக்டேர் பரப்பிலும் இது பயிர் செய்யப்படுகிறது. உயர் விளைச்சல் ரகங்களோடு ஒப்பிடும்போது, இந்த ரகத்தில் கொஞ்சம் விளைச்சல் குறைவுதான். அதாவது, முண்டு மிளகாய் மூலம் ஏக்கருக்கு 1.5 டன் மகசூல் கிடைத்தால், பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ரகத்தில் 2 டன் விளைச்சல் கிடைக்கிறது. அங்கக வேளாண்மை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் போன்றவை மூலம் உற்பத்தித்திறனை அதிகப்படுத்திட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்பகுதி விவசாயிகள் முண்டு மிளகாய் சாகுபடி மூலம் அதிக வருவாய் ஈட்டிட, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் குழித்தட்டுகளில் வீரிய ரக முண்டு மிளகாய் நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறோம். மேலும் இவற்றுக்கு நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் போன்ற இனங்களில் மானியங்களையும் பெற்றுத் தருகிறோம். நடப்பு ஆண்டு 685 ஹெக்டர் பரப்பிற்கு வீரிய ஒட்டு ரக முண்டு மிளகாய் நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளோம். புவிசார் குறியீடு கிடைத்தால், இன்னும் சாகுபடி பரப்பளவு கூடும்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




குளிர்பதன கிடங்கு... நேரடி கொள்முதல்...


இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பாக்கியநாதன். “எங்க ஊர் முண்டு மிளகாய் வத்தல்ல, காரமும் சுவையும் கூடுதலா இருக்குறதுக்கு, இந்தப் பகுதி மண்வளமும் ஒரு முக்கியக் காரணம். கடந்த பத்து, பதினஞ்சி வருஷமா முண்டு மிளகாய்க்கு வரவேற்பு அதிகரிச்சிக்கிட்டே இருக்கு. எங்களோட நிலத்துக்கே தேடி வந்து வியாபாரிங்க இதை வாங்கிக்கிட்டு போயி, பல மடங்கு கூடுதல் விலை வச்சி வெளியில விற்பனை செய்றாங்க. இந்த நிலை மாறணும்.


நாங்க உற்பத்தி செய்யக்கூடிய முண்டு மிளகாய் வற்றலை குளிர் பதன சேமிப்புக் கிடங்குல வச்சிருந்து, சத்தை விலை அதிகரிக்குறப்ப, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமா அரசாங்கமே நேரடியாகக் கொள்முதல் செய்யணும். இதை இந்தப் பகுதி விவசாயிங்க தொடர்ச்சியா வலியுறுத்திக்கிட்டே இருக்கோம். இதுக்குப் புவிசார் குறியீடு வாங்குறதுக்கான முயற்சிகளையும் செஞ்சிக்கிட்டு இருக்கோம்.


Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை