முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!

 # படித்ததில் வலித்தது #


முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!


"எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன... அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!"


என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார். வழக்கு தொடுத்தவரும், அவரே!


ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்!


மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்; வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்!


அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன்.


அவள் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்; இனி எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்தபோது...


திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; அவளை அவளது விருப்பமின்றி யாரோ மயக்கும் வார்த்தை கூறி கடத்திப் போயிருப்பதாக சந்தேகப்படுகிறேன்!


ஆகவே எப்படியாவது என் மகளைக் கண்டுபிடித்து சேர்த்துவைக்க வேண்டும்" என்ற கேட்டிருந்தார்.


நீதிமன்றத்தின் உத்தரவுப்படி... அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம்பெண், "யாரும் என்னைக் கடத்தவில்லை; நான் மேஜரான பெண்; எனக்குப் பிடித்தவருடன் வாழ்வதற்காக நானே தான் விரும்பிச் சென்றேன்!" என்றாள்.


நல்ல ஆங்கிலத்தில் பேசிய அந்த பெண்ணிடம் சம்பாதிக்கும் தோரணையும் இருந்தது.


சரிம்மா, அதற்காக உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி விட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அம்போ...ன்னு விட்டுட்டு போய்ட்டியே... இது என்ன நியாயம் என்று கேட்டேன்!


அந்த இளம் பெண்ணிடம் இருந்து பதில் ஏதுமில்லை;


இதற்கு மேல் சட்டத்திலும் இடமில்லை! ஆனால் என் மனம் கேட்கவில்லை! இது சினிமாவில் வரும் நீதிமன்றம் அல்ல; நிஜமான நீதிமன்றம்! எனவே உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு; எல்லாமே எந்திரத்தனமாக நடந்துவிடாது! ஏதாவது ஒரு திருப்பம் நடக்கும் என்று நினைத்து....


‛சரிம்மா.. உன்னை ஒன்றும் சொல்லல... உன் கூட உன் அம்மா கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்கிறார்;


கொஞ்ச நேரம் பேசிவிட்டு வாருங்கள்' என்றேன்.


இருவரும் பேசும்போது அந்த தாயின் பாசம் மகளின் அடிமனதை நிச்சயம் தொடும்; பழசை நினைத்துப் பார்ப்பாள்; கொஞ்சமாவது பாசத்தோடு ஏதாவது செய்ய முற்படுவாள் என்பது என் எண்ணம்!


ஆனால் அவர்கள் பேசி முடித்து வந்தபோது நான் நினைத்தது போல எதுவுமே நடக்கவில்லை!


"ஐயா உங்களுக்கு எல்லாம் நிறைய சிரமம் கொடுத்துட்டேன்; என் மகள், அவளது விருப்பப்படி விரும்பினவங்க கூடவே இருக்கட்டும்; அவ சந்தோஷமா இருந்தா சரி! என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டு...


ஒரே ஒரு வேண்டுகோள் தான்யா!


இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளைப் பார்ப்பற்காக வந்திருக்காரு, அந்த மனுஷன்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்கய்யா' என்றார்.


‛எங்கேம்மா உன் வீட்டுக்காரர்' என்று கேட்டேன்.


அந்தம்மா கை காட்டிய இடத்தில் ஒருவர் சுவரோடு சுவராக சாத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தார்.


அவருக்கு கைகால் வராது என்பதால் துாக்கிக் கொண்டுவந்து சுவற்றில் சாத்தி வைத்துள்ளனர்.


கோர்ட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து... அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது.


அந்த ‛அன்பு' மகளை நோக்கி என்ன செய்யப்போகிறாய் என்பது போல பார்த்தேன்!


அந்த பெண்ணோ இதை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல்,‛ நான் கிளம்பலாமா?' என்று கேட்டுவிட்டு வெளியே காருடன் காத்திருந்த காதலன் அல்லது கணவனுடன் சிட்டாக பறந்து சென்றுவிட்டார்.


‛சரிங்கய்யா, நாங்க புறப்படுறோம்' என்ற அந்த பெண்ணின் தாயாரிடம் ‛ஊருக்கு எப்படி போவீங்க' என்று கேட்டபோது... ‛சொந்த ஊருக்கு போக எப்படியும் நாற்பது ரூபாய் தேவைப்படும்; பஸ்ஸ்டாண்ட் போய் பிச்சை எடுப்பேங்கய்யா; கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்யா; அப்புறம் ஊருக்கு போய்ட்டா...


வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைச்சுடும்; பிழைச்சுக்கவோம், ஐயா' என்றார்.


நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்கும் துாக்கிவாரிப்போட்டது!


‛இந்தாம்மா, நீ பிச்சை எடுக்க வேணாம்; என்னோட அன்பளிப்பா ஏத்துக்குங்க' என்று சொல்லி பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்!


நான் கொடுத்ததைப் பார்த்த நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என்று ஆளாளுக்கு கொடுத்ததில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது.


அதை அந்த அம்மாவிடம் கொடுத்து... உங்கள் கவலைக்கு இது மருந்தல்ல; ஊருக்கு போவதற்கான சிறு தீர்வு தான்! என்று சொல்லிக்கொடுத்தேன்.


*பெற்றவர்களைப் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்களே... என்று அன்று முழுவதும் மனம் வேதனைப்பட்டது.*


"பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம்! என்பதை உணருங்கள்"


என்ற வேண்டுகோளுடன் முன்னாள் நீதிபதியான சா.நாகமுத்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY