குருதேவர் சொன்ன குட்டிக் கதை - நல்லது கேட்டது - ராமகிருஷ்ண பரமஹம்சர்

 குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.


“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.


ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான்.


ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச் சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர். சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர்.


சீடன் என்ன காரணம் என்று கேட்டான்.


அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினர்.



ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார். அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி விட்டு தன் பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.


எதிரே பெரிய யானை ஒன்று வெறியோடு பிளிறிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன், சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான்.


ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான்.


எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது. தூர வீசி எறிந்தது.


பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான்.


உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று, “எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீரே, எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக் காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும் வினவினான்


அதற்கு குருநாதர், “அப்பா, யானையில் நாராயணன்  இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு முன் பாகன் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி எச்சரித்தானே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார்.


சீடன் பதில் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.


”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை முடித்தார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.


சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை