ஒரு ஏக்கர்... ரூ.1,35,000... அசத்தல் வருமானம் தரும் 'அழகிவிளை' நாட்டு ரக முருங்கை!

 




தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு ஏக்கரில் ‘அழகிவிளை’ என்ற நாட்டு ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். 25.02.2016 தேதியிட்ட இதழில், “15 சென்ட்... 150 நாள்... 70 ஆயிரம் லாபம்” என்ற தலைப்பில் இவரைப் பற்றி ஏற்கெனவே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பாகல் சாகுபடி குறித்த தன் அனுபவத்தை அதில் பதிவு செய்திருந்தார். தற்போது இவர் சாகுபடி செய்துள்ள அழகிவிளை நாட்டு ரக முருங்கை அனுபவம் குறித்து அறிந்துகொள்ள மீண்டும் இவரைச் சந்திக்கச் சென்றோம்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நடுவக்குறிச்சி கிராமம். இங்குதான் பாலகிருஷ்ணனின் முருங்கை தோட்டம் உள்ளது. நாம் சென்றபோது சுறுசுறுப்பாகக் காய்களைப் பறித்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார்.






முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல்

‘‘சாத்தான்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல நல்ல வளமான செம்மண் நிலம் அதிகம். இங்கவுள்ள விவசாயிங்கள்ல பெரும்பாலானவங்க, நீண்ட காலமா முருங்கை சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. இந்த மண் வாகுக்கு முருங்கை ரொம்ப நல்லா விளையுது. நான் சாகுபடி செய்றது ‘அழகிவிளை’ங்கிற நாட்டு ரகம். இதோட காய்கள் நல்ல திரட்சியா சதை பத்தா இருக்கும். சந்தையில இந்த ரக முருங்கை காய்களுக்கு எப்பவுமே நல்ல வரவேற்பு இருக்கு’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.


‘‘எனக்கு இதுதான் சொந்த ஊர். நாங்க விவசாயக் குடும்பம். நான் எட்டாம் வகுப்பு வரை படிச்சிட்டு, சென்னையில ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குப் போயிட் டேன். பத்து வருஷம் கழிச்சு சொந்த ஊருக்கு திரும்பி வந்துட்டேன். எங்க குடும்பத்துல சொத்து பிரிச்சு எனக்குனு சொந்தமா மூணு ஏக்கர் நிலம் கொடுத்தாங்க. விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். ரசாயன முறையில செவ்வாழை சாகுபடி செஞ்சேன். குலை தள்ளுற சமயத்துல தண்ணி பத்தாம போய்ப் பாதி வாழை மரங்கள் பட்டுப்போச்சு. அதனால மனசு விரக்தி அடைஞ்சு விவசாயத் தைக் கைவிட்டுட்டு, துணி வியாபாரம், ஃபோட்டோகிராஃபினு பிற தொழில்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.





முருங்கைத் தோட்டம்

இந்தச் சூழல்லதான் 2011-ம் வருஷம் ஒரு நாள் வெளியூர் போறதுக்காக பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு இருந்தப்ப, அங்கவுள்ள கடையில செவ்வாழை படம் போட்டு ஒரு புத்தகம் தொங்கிக்கிட்டு இருந்துச்சு. அதை வாங்கிப் படிச்சிப் பார்க்கணும்னு என்னையும் அறியாமல் ஆர்வம் ஏற்பட்டுச்சு. அந்தப் புத்தகம் பசுமை விகடன். இயற்கை முறையில செவ்வாழை சாகுபடி செஞ்சு நிறைவான லாபம் பார்க்கக் கூடிய ஒரு விவசாயியோட பேட்டி அதுல விரிவா வெளியாகி இருந்துச்சு. அதைப் படிச்சதும் பசுமை விகடன் மேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. தொடர்ச்சியா வாங்கிப் படிச்சிக்கிட்டே இருந்தேன். இயற்கை விவசாயம் மூலம் கண்டிப்பா சாதிக்க முடியும்ங்கற நம்பிக்கையும் ஏற்பட்டுச்சு. அதோட நிறைய தொழில் நுட்பங்களையும் தெரிஞ்சிக்கிட்டேன்.


2012-ம் வருஷம் இயற்கை விவசாயத்துல இறங்கினேன். கால் ஏக்கர் கனகாம்பரம் பயிர் பண்ணினேன். நல்ல மகசூல் கிடைச்சது. பூக்களும் நல்ல தரமா இருந்துச்சு. ஆனா, பறிப்புக்கு ஆள் கிடைக்கலை. அதனால கனகாம்பரம் சாகுபடியை கை விட்டுட்டு, முருங்கை சாகுபடியில இறங்கினேன். ஒரு ஏக்கர்ல அழகிவிளைங்கற நாட்டு ரக முருங்கையைப் பயிர் பண்ணினேன். கடந்த அஞ்சி வருஷமா நிறைவான மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு. என்னோட அனுபவத்துல இதுவோர் அருமையான ரகம்.



அறுவடையான முருங்கைக் காய்களுடன் பாலகிருஷ்ணன்

இதோ பாருங்க... மழை நேரத்துலயும் கூட, காய்கள்ல அடர்பச்சை நிறம் மாறாம அப்படியே இருக்கு. இதுதான் இந்த ரகத்தோட தனிச் சிறப்புனு சொல்லலாம். காய்களோட தோல் சற்றுக் கடினமாக இருக்குறதுனால, சீக்கிரத்துல வதங்கிப் போகாது. நுனிப்பகுதி பெரும்பாலும் வளைஞ்சிருக்காது, நீட்டுப்போக்கா இருக்கும். இதுமாதிரியான முருங்கைக் காய்களைத்தான் மக்கள் விரும்பி வாங்குவாங்க.


காய்ப்புத்திறன் அதிகம்


உப்புத்தன்மை அதிகம் உள்ள தண்ணி யைப் பாய்ச்சினாலும் இது நல்லா விளையும். அழகிவிளை ரக முருங்கை யோட இன்னொரு முக்கியச் சிறப்பு, இதுல காய்ப்புத்திறன் அதிகம். கிளைகள் முழுக்கக் காய்கள் காய்ச்சி தொங்கும். இதுக்குப் பராமரிப்பு செலவுகளும் அதிகம் கிடையாது. இதுவரைக்கும் ஒரு ஏக்கர்ல தான் இந்த நாட்டு முருங்கையைச் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தேன். உத்தரவாதமான லாபம் கிடைச்சதுனால, கூடுதலா ரெண்டு ஏக்கருக்கு இதை விரிவுபடுத்துறதுக்காக, மூணு மாசத்துக்கு முன்னாடி குச்சி (முருங்கை போத்து) நட்டேன். அந்த ரெண்டு ஏக்கர்ல இன்னும் நாலஞ்சு மாசங்கள் கழிச்சு மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும்’’ என்று சொன்ன பாலகிருஷ்ணன், ஏற்கெனவே மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஏக்கர் பரப்பிலான நாட்டு முருங்கையின் வருமானம் குறித்து விவரித்தார்.




தொடர்புக்கு, பாலகிருஷ்ணன்,


செல்போன்: 94425 53279

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை