உன் பலம் என்ன? சிறுகதை

 நீதிக்கதை



    ஓர் ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்துவந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் இளைப்பாறியபோது, குயிலைப் பார்த்தார்கள்.



       தன் முட்டையைக்கூட அடைகாத்துக் குஞ்சுப் பொரிக்காமல், காகத்தின் கூட்டில் இடும் சோம்பேறி’’ , என்றார்கள்.


      அதைக் கேட்ட குயில், ‘நான் சோம்பேறி பறவைதானா?’ என்று வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பியது.


     அந்த மரத்தில் வந்துமர்ந்து ஆலம்பழத்தைக் கொறித்த கிளி, “தத்தை மொழி பேசும் கிள்ளை என என்னைப் புகழ்வார்கள்” என்றது.


     கோயில் மண்டபத்தில் வசித்து புறா, “கொஞ்சும் புறா, சமாதானத் தூதுவன் எனப் பெருமையாப் பேசுவாங்க” என்றது.



      குயில் அடுத்ததாக மொட்டைப் பாறை மீது நின்றிருந்த மயிலிடம் சென்றது. “நான் தோகை விரித்தாடினால் காணக் கண்கோடி வேண்டும்னு பாராட்டுவாங்க!” என்றது.


     அடுத்ததாகச் சிட்டுக்குருவி, “என்னைப் பார்த்துத்தான் சுறுசுறுப்பைக் கத்துக்கணும்னு மனுஷங்க பேசிப்பாங்க!” என்றது.


       இப்படிக் குயில் சந்தித்த பறவைகள் அனைத்தும் தங்களைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதாகத் தெரிவித்தன.


       ‘மற்ற பறவைகளைத் திறமைகளுடன் படைத்த கடவுள், என்னை விட்டுவிட்டாரே?’ எனக் கண்ணீருடன் ஆற்றங்கரையோரம் அமர்ந்தது.



      சுழித்துக்கொண்டு ஓடும் நீரின் சலசலப்பு போன்று குயிலின் மனமும் அமைதியற்று இருந்தது. அந்த ஆற்றில் வசித்த தேவதை, குயிலின் அழுகையைக் கேட்டு மேலே வந்தது.


       குயிலைத் தனது மடியில் வைத்து வாஞ்சையுடன் வருடியபடி, “உனக்கு என்ன பிரச்னை?” எனக் கேட்டது.


குயில் தனது வருத்தத்தைச் சொன்னதும், தேவதை கலகலவென்று சிரித்தது.


“இதுக்கா வருத்தப்படறே? உன் பலம் உனக்குத் தெரியலை!” என்றபடி தொடர்ந்தது.


       “காலநிலை நான்கு வகைப்படும். கார்காலம், கூதிர்காலம், கோடைக்காலம், குளிர்காலம். அதில், குளிர்காலத்தை முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என இரண்டாகப் பிரிப்பாங்க. கோடைக்காலத்தை இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்னு இரண்டாகப் பிரிப்பாங்க.



       இதில், இளவேனிற் காலம்தான், வசந்த காலம். பின்பனிக் காலத்தில் இலைகளை உதிர்த்த மரங்கள், வசந்த காலத்தில்தான் திரும்பவும் துளிர்க்கும்; பூக்கள் பூக்கும். மனத்தை வருடும் தென்றல் காற்று வீசும். இதமான வெயிலும் இருக்கும். அப்படிப்பட்ட வசந்த காலம் வந்துவிட்டதை, முதன்முதலா இனிமையாகக் கூவி எல்லாருக்கும் தெரிவிப்பதே நீதான். பிறகுதான் மற்ற பறவைகள், மழைக்காலத்துக்குத் தேவையான உணவைச் சேகரிக்கின்றன” என்றது தேவதை.


தேவதைச் சொன்னதை ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது குயில்.



       “புறா குணுகுவதும், மயில் அகவுவதும் இனிமையா இருப்பதில்லை. அதைத் தங்களின் பலவீனமாகவும் நினைப்பதில்லை. அதுமாதிரி நீ காகத்தின் கூட்டில் முட்டை இடுவது உன் வாழ்க்கை முறை. அதைப் பலவீனமா நினைக்காமல், உன் பலம் மட்டுமே மனசுக்குள் இருக்கட்டும்’’ என்றது தேவதை.



     உற்சாகம் பெற்ற குயில், தேவதையை வணங்கிவிட்டுப் பறந்தது. மறுநாள் அதிகாலையில் விழித்துக்கொண்டது. குளிர்ச்சியானத் தென்றல், உடலைத் தழுவுவதை உணர்ந்தது.


 

      எட்டத்தில் நின்றிருந்த வேம்பு, நேற்றுவரை மொட்டையாக இருந்தது. இன்றோ, இளம்பச்சை நிறத்தில் இலைகள் துளிர்த்திருந்தன. வெள்ளை நிறப் பூக்கள் அரும்பியிருந்தன. வசந்த காலம் வந்துவிட்டதைக் குயில் உணர்ந்துகொண்டது.



     ‘நான் கவிக்குயில். வசந்த காலப் பறவை. அனைவருக்கும் வசந்தம் வந்துவிட்டதை அறிவிக்க வேண்டும்’ என்ற முனைப்புடன், ‘அக்காவ்... அக்காவ்!’ என ராகமிட்டுப் பாட ஆரம்பித்தது.


தன் பலம் அறிந்தால் பலவீனம் காணாமல் போய்விடும்....


So... நீங்க உங்ககிட்ட இருக்கிற திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்...

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை