5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.12,50,000 அருமையான லாபம் கொடுக்கும் அடர்நடவு கொய்யா!

 

வெளிநாட்டு வேலை... லட்சங்களில் வருமானம்... ஆனால், அவை அனைத்தையும் உதறிவிட்டு பலரும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி வருகின்றனர். அந்த வரிசையில், சுந்தர்ராஜ - சாந்தி தம்பதியர் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறிவிட்டு, தற்போது முழு நேரமாக இயற்கை விவசாயத்தில் இறங்கி அசத்தி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைத் அடுத்துள்ள, ரெகுநாதபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது காடம்பட்டி. அங்குதான் இருக்கிறது இவர்களுடைய கொய்யாத் தோட்டம். 5 ஏக்கரில் கொய்யா நடவு செய்து அதில் நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு காலை வேளையில், கொய்யா அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த சாந்தியைச் சந்தித்தோம்.



“நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சேலம். ‘இன்ஜினீயரிங்’ முடிச்சிட்டு ‘எம்.பி.ஏ’ பண்ணுனேன். அதற்கப்புறம் ஒரு ‘சாஃப்ட்வேர் கம்பெனி’யில வேலைக்குப் போயிட்டேன். இடையில, திருமணம் ஆச்சு. கணவருக்கும் நான் வேலை செய்ற ‘ஐ.டி’ துறையிலதான் வேலை. சில வருஷங்கள்ல ரெண்டு பேரும் தனியாக ‘சாஃப்ட்வேர் கம்பெனி’ ஆரம்பிச்சு நடத்துனோம். கிட்டத்தட்ட 30 வருஷம் ரெண்டு பேரும் ‘ஐ.டி பீல்டு’ல இருந்துட்டோம். ‘சாஃப்ட்வேர்’ பிடிச்ச வேலைதான், ரொம்ப வருஷம் இருந்ததால என்னவோ, இந்தப் ‘பீல்டு’ இனி வேண்டாம்னு தோணுச்சு. அத விட்டுட்டு வெளியே வந்த பிறகு, என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் இயற்கை விவசாயம் பண்ணலாம்ங்கிற எண்ணம் வந்துச்சு.



அதுவும் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி இயற்கை விவசாயம் செஞ்சா விவசாயத்துலயும் பெருசா ஜெயிக்க முடியும்ங்கிற நம்பிக்கை வந்துச்சு. முழுக்க முழுக்க ‘ஐ.டி பீல்டு’ல இருந்து ரெண்டு பேரும் வெளிய வந்து, இப்போ முழு நேரமா விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கோம்’’ என்றவர் தங்கள் விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.


‘‘காடம்பட்டி, மாமியாருக்குச் சொந்த ஊரு. அங்க எங்களுக்குக் கொஞ்சம் இடம் இருந்துச்சு. அதோட, 2018-ம் வருஷம் கொஞ்சம் இடத்தையும் வாங்குனோம். இப்போ எங்களுக்கு இங்க 10 ஏக்கர் இருக்கு. இங்கேயே வீடு கட்டி குடியேறிட்டோம். ஆரம்பத்துல விவசாயம் செய்யலாம்னு சொல்லி, ஊர்ல உள்ள எல்லார் மாதிரியும் நெல், நிலக்கடலை, எள்ளுன்னு போட்டோம். நாங்க ஆரம்பிச்ச நேரம்னு பார்த்து கஜாபுயல் வந்து சாகுபடி பாதிச்சிருச்சு. அடுத்த முறை 8 ஏக்கர்ல நெல் நடவு செஞ்சிருந்தோம். ஏக்கருக்கு 44 மூட்டைன்னு நல்ல மகசூல் கிடைச்சது. ஆனாலும், உழவுலயிருந்து அறுவடை கூலி வரைக்கும் எல்லாத்தையும் கணக்குப் போட்டுப்பார்த்தா, கடைசியில ஏக்கருக்கு 5,000 ரூபாய்தான் கிடைச்சது.


அதுக்கப்புறம்தான் நெல், கடலைக்கு மாற்றா வேற ஏதாவது செய்யலாம்னு யோசிச்சோம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், கோவைன்னு வெளிமாவட்டங்கள்லயும், ஆந்திரா முழுவதும் பல்வேறு இடங்கள்லயும் விவசாயிகளை நேரடியாகச் சந்தித்துப் பேசினோம். அங்க எல்லாம் பழ வகை களையே அதிகம் சாகுபடி செஞ்சிருந்தாங்க. அதுலயிருந்து நல்ல வருமானம் கிடைக்கிற தாகவும் சொன்னாங்க.


குறிப்பா, ஆந்திராவுல அதிகமா கொய்யா சாகுபடி செஞ்சிருந்தாங்க. குறைஞ்சபட்சம் 50 ஏக்கர்ல இருந்து 100 ஏக்கர் வரைக்கும் வச்சிருக்காங்க. எல்லாமும் 2 மீட்டருக்கு 1 மீட்டர் இடைவெளியில் அடர் நடவுதான்.



பெரும்பாலும் தைவான் பிங்க் வகைக் கொய்யாவைத்தான் நடவு செஞ்சிருந்தாங்க. ஆந்திரா போயிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் நம்ம தோட்டத்துலயும் கொய்யா நடவு செய்யலாம்னு முடிவு பண்ணினேன். அங்கயிருந்தே செடிகளை வாங்கிக்கிட்டு வந்து முதல் முயற்சியா 5 ஏக்கர்ல நிலத்தைத் தயார் செஞ்சு செடிகளை நடவு செஞ்சோம். அடர் நடவுதான். ஏக்கருக்கு 2,000 வீதம் 5 ஏக்கர்லயும் 10,000 செடிகள் நடவு செஞ்சோம். ஒரு ஏக்கர்ல 2,000 செடிகள் போட்டா காய்ப்பு இருக்காதுன்னு பலரும் சொன்னாங்க. ஆந்திரா பகுதியில அப்படித்தான் போட்டுருந்தாங்க. அவங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சொன்னதால நாங்களும் அப்படியே போட்டுட்டோம்’’ என்றவர், கொய்யா தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார்.


‘‘நடவு பண்ணுன 3 மாசத்துல இருந்தே பூ, பூத்து காய்க்க ஆரம்பிச்சிருச்சு. ஆனா, குறைஞ்சபட்சம் 10 மாசத்துக்கு அப்புறம்தான் பூ, பூக்க ஆரம்பிச்சு காய்கள் காய்க்கிற மாதிரி பார்த்துக்கணும். அப்பத்தான் அந்தச் செடி பலமாகத் தண்டுப் பகுதி தடிச்சு இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகள்ல நல்ல காய்ப்பு கொடுக்கும். 3 மாசத்துலயே பூக்கள் பூக்க ஆரம்பிச்சதால, பூக்கள் எல்லாத்தையும் உதிர்த்து, நுனிகளையும் கிள்ளிவிட்டுக்கிட்டு இருந்தோம். எங்க பகுதியில இருக்கவங்க எல்லாம், இதுபத்தி தெரியாம ‘இவங்களுக்கு எல்லாம் வேற வேலை, ஐ.டியில சம்பாரிச்ச காச என்ன செய்யிறதுன்னு தெரியாம இதுல போட்டு அழிக்கிறாங்க’ன்னு எங்க தோட்டத்துல வேலைபார்க்கிறவங்ககிட்ட சொல்லிக் கண்டபடி பேசியிருக்காங்க. அதோட, முழுசா சொட்டு நீர்ப்பாசனம் வேற போட்டுட்டோம். ‘100 அடியில தண்ணீர் இருக்கும்போது, அறிவாளிங்க வாய்க்கால் பாசனத்தைச் செய்யாம, சொட்டு சொட்டா விட்டுக்கிட்டு இருக்குங்க’ன்னு சொல்லியும் கேலியும் கிண்டலும் பண்ணியிருக்காங்க.


ஆரம்பத்துல இருந்தே, நாங்க எது செஞ்சாலும் எங்களை வித்தியாசமாகவே பார்த்தாங்க. நாங்க எதையும் பெருசா கண்டுக்கிடல. இப்போ கொய்யாவுலயிருந்து எங்களுக்கு நல்ல வருமானம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. இதை நேரடியாகப் பார்த்துட்டு இப்போ பலரும் எங்ககிட்ட வந்து ஆலோசனை கேட்கிறாங்க. ஆரம்பத்துல எங்களுக்கும் பெருசா இதுபத்தி தெரியாது. முன்னோடி விவசாயிகள், ‘யூடியூப்’ எல்லாம் பார்த்து சாகுபடி நுட்பங்களைத் தெரிஞ்சி கிட்டேன். நான் தோட்டத்தைப் பார்த்துக் கிட்டா, கணவர் விற்பனையைப் பார்த்துக் கிறாரு. கணவர் ஒத்துழைப்பு இல்லாம இது கண்டிப்பா சாத்தியமில்லை’’ என்றவர், விற்பனை, வருமானம் குறித்துப் பேசினார்.


‘‘5 ஏக்கர் நிலத்தில் தினமும் கொய்யா பறிக்கிறோம். வியாபாரிகள் நேரடியாகத் தோட்டத்துக்கு வந்தே வாங்கிட்டுப் போறாங்க. இயற்கை முறையில விளையுற தைவான் ரகக் கொய்யா நல்ல சுவையா இருக்குறதால, தேடி வந்து பலரும் வாங்கிட்டுப் போறாங்க. இப்போதைக்கு விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. கிலோ 50 ரூபாய்க்கு கொடுத்துக்கிட்டு இருக்கோம்.


வருஷத்துல 8 மாசம் அறுவடைக்கு ஒதுக்குறோம். அடுத்த 4 மாசம் கவாத்து உள்ளிட்ட பரமாரிப்புப் பணிகளுக்கு ஒதுக்கிடணும். 5 ஏக்கர்லயிருந்தும் வாரத்துக்குக் குறைந்தபட்சம் ஒரு டன் பழங்கள் கிடைச்சிடுது. மாசத்துக்கு 4 டன். மொத்தமா அறுவடை சீஸன் 8 மாசமும் சேர்த்தால், 32 டன் பழங்கள் கிடைக்கும். 32 டன்னையும் விற்பனை செய்வதன் மூலமா 16,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏக்கர் கணக்குக்குப் பார்த்தால் 3,20,000 ரூபாய் கிடைக்குது. உரம், அறுவடைகூலின்னு எல்லாத்தையும் சேர்த்து ஏக்கருக்கு 70,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக ஏக்கருக்கு 2,50,000 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்குது. மொத்தம் 5 ஏக்கருக்கும் சேர்த்து 12,50,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,




‘‘முறையா காவத்து செஞ்சு, சரியா இடுபொருள் கொடுத்தா, கொய்யாவுல அதிக வருமானம் பார்க்கலாம். குறிப்பா, நேரடியா விற்பனை செய்தா இன்னும் கூடுதலான லாபம் கிடைக்கும். கொய்யா மதிப்புக்கூட்டுதல், நேரடி விற்பனை முயற்சிகளையும் செஞ்சுகிட்டு வர்றோம். ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது கொய்யா. பெரிதாக வேலை கொடுக்காது. மற்ற பயிர்களைக் காட்டிலும் கொய்யா நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிராக இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.


தொடர்புக்கு, சாந்தி,


செல்போன்: 93601 75761




இப்படித்தான் கொய்யா சாகுபடி


அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி குறித்து, சாந்தி சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக...


வடிகால் வசதியுடைய அனைத்து வகையான மண்களிலும் கொய்யா வளரும். ஜூன் மாதம் கொய்யா நடவுக்கு ஏற்ற மாதம். சாகுபடி நிலத்தைத் தயார்படுத்தி வரிசைக்கு வரிசை ஆறரை அடி, செடிக்குச் செடி மூன்றரை அடி இடைவெளியில் குழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு குழிக்கு ஒரு கிலோ தொழுவுரம், 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 10 கிராம் வேம், சூடோமோனஸ் போட்டு நன்கு கலந்துவிட்டு, கன்று நடவு செய்ய வேண்டும்.





ஆரம்பத்தில் 3 நாள்களுக்கு ஒருமுறை பாசனம். பிறகு, மரங்களில் காய்கள் இருப்பதைப் பொறுத்து 15 நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது. வாய்க்கால் பாசனத்தை விடவும் சொட்டுநீர்ப் பாசன முறை சிறந்தது. செடிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைப்பதால், மற்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கி களைகள் மண்டாது. நடவு செய்ததிலிருந்து அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மூலிகைக் கரைசல் உள்ளிட்டவற்றை 7 நாள்கள் இடைவெளியில் சுழற்சிமுறையில் சொட்டு நீர் மூலம் கொடுத்து வர வேண்டும். இதேபோல், காய்ப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த, தேமோர்கரைசல், பத்திலைக்கரைசல் தெளிப்பது அவசியமானது. இதுவும் 7 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்து குறைபாடு வரும். இலைகள் மஞ்சள் நிறமாகவும், ரோஸ் நிறத்திலும் மாறும். அப்போது, நுண்ணூட்ட உயிர் உரங்களைக் கொடுக்க வேண்டும். மாதம் 3 லிட்டர் வரையிலும் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் கொடுக்கலாம்.


வெள்ளை ஈக்கள் தொந்தரவு வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அதற்கு, வெர்டிசீலியம் லக்கானி, பவேரியா பேஸியானா போன்ற உயிர் உர பவுடரை ஒரு டேங்க்குக்கு ஒரு ஸ்பூன் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால், ஈக்கள் தொந்தரவு கட்டுப்படும். நடவு செய்த 3 மாசம் முதல் பூக்கள் வர ஆரம்பிக்கும். விரைவில் பூத்துக் காய்க்க ஆரம்பித்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் முதல் 10 மாதங்களுக்குப் பூ, பிஞ்சு வர, வர அதை அகற்றி விட வேண்டும். அப்படிச் செய்தால்தான் தண்டுப் பகுதி தடிமனாக மாறும். 8 மாதங்கள் அறுவடை என்றால், 4 மாதங்கள் கவாத்துப் பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். ஒன்றரை அடி உயரம் வந்தவுடன் செடிகளை வெட்டிவிடுதல், கவாத்து பணிகளைச் செய்ய வேண்டும். காய் 400 கிராம், 500 கிராம் அளவில் வர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கொய்யாவுக்கு அடி உரமாக 2 கிலோ தொழுவுரம், பிண்ணாக்கு கலவையும் வைப்பது அவசியம். முறையாகக் கவாத்துச் செய்து பராமரித்தால் கொய்யாவில் நல்ல லாபம் ஈட்டலாம்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை