ஆன்லைன் மூலம் செக்கு எண்ணெய் பிசினஸ்

``புதுமையும், சரியான திட்டமிடலும் இருந்தால் போதும் எந்த புது முயற்சியிலும் வெற்றி பெறலாம்" எனத் தன்னம்பிக்கை பொங்கப்  பேசும் காயத்ரி, ஆன்லைன் வர்த்தகம் மூலமாக மரச்செக்கு எண்ணெய், வடகம், மசால் பொடி வகைகள், ஊறுகாய் போன்ற ஹோம் மேட் பொருள்களை விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய புதுமையான முயற்சியினால் பல வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் காயத்ரி தன் சக்சஸ் சீக்ரெட் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.







``எனக்குச் சொந்த ஊர் சேலம். படிப்பு முடிந்ததும் திருமணமாகி கணவருடன் துபாயில் செட்டில் ஆனேன். குடும்பம், குழந்தை என சராசரி வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் என்றாலும், சராசரி பெண்ணாக வாழ்க்கையை நகர்த்துவதில் எனக்கு விருப்பமில்லை. அதைத் தாண்டி வரவேண்டும் என்ற என் நினைப்புதான் `ஸ்ம்ரித்திகா' என்ற பெயரில் ஆன்லைன் பிசினஸாக உருவெடுக்கக் காரணமாக அமைந்தது.
``என்னுடைய சின்ன வயதில், எங்கள் ஊர் முழுவதும் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும். எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் துணி வியாபாரம், பாத்திர வியாபாரம், எண்ணெய் வியாபாரம் என்று அந்தந்த குடும்பத்துக்கான அடையாளமாக பிசினஸ் பார்க்கப்பட்டது. ஆனால் பெருகிவிட்ட `மால் கலாசாரம்' எங்கள் ஊருக்கான அடையாளத்தையே மாற்றி, பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் வேறு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் எங்கள் ஊர் மக்கள். சந்தையில் நிரம்பி வழிந்த கூட்டம் மால்களில் காண முடிகிறது. மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இதையெல்லாம் சிந்தித்ததன் விளைவு ஆன்லைன் பிசினஸில் இறங்கலாம் என்று முடிவெடுத்தேன். 


குழந்தைகளின் படிப்புக்காக துபாயிலிருந்து இந்தியா வந்தோம். என் பிசினஸ் ஆசையைச் சொல்லி கணவரிடம் ஐடியா கேட்டேன். `இப்ப எல்லாரும் ஆன்லைன்லதான் பர்சேஸ் பண்றாங்க. பேசாம அதுல என்ன பண்ணலாம்னு டிரை பண்ணேன்னு' சொன்னார் என் கணவர். ஆன்லைன்ல இருந்த பல பிசினஸ்களை ஆராய்ந்து பார்த்தேன். பாரம்பர்யப் பொருள்களுக்கான மவுசு ஆன்லைனில் அதிகமா இருக்கிறதை தெரிஞ்சுகிட்டேன். நிறைய திட்டமிடலுக்குப் பிறகு, மரச் செக்கு எண்ணெய்களை ஆன்லைன் மூலமா சேல் பண்ற ஐடியாவுக்கு வந்தேன். நேரடியா விவசாயிகளிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்து,செக்குகளின் மூலம் ஆட்டி .தயார் செய்த எண்ணெய் பேக்களை ஆன்லைன், என்னுடைய முகநூல் பக்கத்தில் அப்லோடு செய்தேன்.நல்ல வரவேற்பு இருந்தது.



வாங்கிப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களிடம் இருந்தும் பாசிட்டிவ் கமென்ட் வர, ஆர்டர் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க ஆரம்பிச்சது. வெறும் எண்ணெய் மட்டும் விற்காமல், தேன், வடகம், வற்றல், மசால் பொடி வகைகள் எனக் கொஞ்சம் கொஞ்சமா பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பிச்சேன். இப்ப ஏழு வருஷமாகிடுச்சு. எந்த பிரிசர்வேட்டிவும் இல்லாமல் கைப்படாமல் பேக் செய்ற பொருள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு போய் சேர்க்கிறதுதான் பெரிய டாஸ்க். ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் விற்பனையான எங்களுடைய பொருள்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணமாகிறது'' என்றவர் இந்த பிசினஸில் உள்ள சிக்கல்களையும் பகிர்ந்துகொண்டார். 




``ஆரம்பத்தில் பொருள்களை ஆர்டர் கொடுத்தவர்களிடம் உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் நிறைய சிரமப்பட்டேன். உணவுப் பொருள்களை பல கொரியர் நிறுவனங்களில் வாங்க மாட்டார்கள். அதனால் உரிய ஆள்களை நியமித்து டோர் டெலிவரி செய்தேன். ஆன்லைன் மூலம் வரும் பொருள்களின் தரம் சரியிருக்காது என்கிற எண்ணத்தை உடைக்கப் பாடுபட்டேன். எப்போதும் என் பொருள்களின் தரத்தை லாபத்துக்காகச் சமரசம் செய்து குறைப்பதில்லை நான். எனக்கான லாபத்தை அதிகரிக்காமல் விற்பனையை அதிகரித்து அதன் மூலம் எனக்கான வருமானத்தை உருவாக்குகிறேன். மாதம் முப்பதாயிரம் வரை வீட்டில் இருந்தே சம்பாதிக்கிறேன். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு கிடைக்கும் நேரங்களில் பிசினஸ் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது'' என்றார் பெருமையுடன்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ