வல்லுனர் டிப்ஸ் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான 12 அறிகுறிகள்!

 1. வீட்டிலும் வேலையிலும் ஒழுங்கின்மை

வீட்டில் எந்தெந்த வேலைகளில் முதலில் முடிப்பது, எதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தெரியாமல் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்வது, வீட்டில் உள்ள அறைகளில் எந்தப் பொருளையும் இருந்த இடத்தில் வைக்காமல் ஏனோ தானோவென கிடாசிவிட்டு, பின்னர் தேவைப்படும் பொருட்களைத் தேட அதிக நேரம் எடுத்துக்கொள்வது எல்லாமே ஒழுங்கின்மையின் கீழ்தான் வரும்.

அலுவலகத்திலும் அன்றாட வேலைகளை சரியாக திட்டமிடாமல் செய்வதும், பின்னர் குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாமல் திணறுவதும் கூட ‘Disorganized’ என்று சொல்லக் கூடிய ஒழுங்கின்மைதான். இந்தப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்குவதும் நம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான முக்கிய அறிகுறியே.


2. நேரத்தை உண்ணும் விரல்!

கையில் மொபைலை வைத்துக் கொண்டு எந்த நேரமும் சமூக வலைதளங்களில் விரல்களால் ஸ்க்ரால் செய்வது வருவது நம்மில் பலரிடமும் நம்மை அறியாமல் புகுந்துவிட்ட அடிக்‌ஷன் என்றே சொல்லலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் போஸ்டுகளை அடிக்கடி பார்ப்பது ஒரு பக்கம் என்றால், கிடைக்கிற சில நிமிட இடைவெளிகளில் ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்ற குட்டி குட்டி வீடியோக்களை விரல்களால் நகர்த்திப் பார்க்கும் பழக்கத்தால் நமது பல மணி நேரம் கொல்லப்படுவதே நமக்குத் தெரியாமல் போவதும் முக்கிய அறிகுறிதான்.


இங்கே கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம் ஆகிறது. இப்படி ஸ்க்ரால் செய்து பார்க்கவில்லை என்றால் நாம் அப்டேட்டாக இல்லாமல் போய்விடுவோமோ? அல்லது லேட்டஸ்ட் ட்ரெண்ட் எதுவும் தெரியாமல் போயிவிடுமோ என்றெல்லாம் சிலர் அஞ்சலாம். எந்த முக்கிய அப்டேட்டுகளும், ட்ரெண்டுகளும் நம்மை எளிதாக தானாகவே வந்து சேர்ந்துவிடும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு விரல்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்வது ஒன்று மட்டுமே மீளும் வழி.


3. ஓடிடியில் கரையும் நேரம்

இந்தக் காலத்தில் டிவி, தியேட்டரை விட தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது ஓடிடி தளம். நாம் பணம் செலுத்தி சப்ஸ்க்ரைப் செய்துவிட்டோம் என்பதற்காகவே எல்லாவற்றையும் பார்த்துத் தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஓடிடியை திறந்தாலே நம்மை உள்ளே விழுங்கக் கூடிய விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படங்களும் சீரிஸும்தான் அதிகம். சீரிஸ்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டால் எபிஸோடுகளின் எண்ணிக்கையும் நம் நேரமும் கடப்பதே தெரியாமல் போகும் அளவுக்கு அடிமையாவதும் நிகழும்.

இதனால், தூக்கமின்றி உடல் ரீதியிலான பாதிப்பும் ஏற்படும் அபாயம் உண்டு. எனவே, அளவாக ஓடிடியை பயன்படுத்தலாம். இணையத்தில் கிடைக்கக் கூடிய நல்ல விமர்சனங்களைப் படித்துவிட்டு, நல்ல படங்கள் - சீரிஸ்களைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதன் மூலம் ஓடிடியை உருப்படியாக பயன்படுத்த முடியும்.


4. வெற்று சாட்கள்


நவீன உலகில் உறவுகளும், உறவை வளர்ப்பதும் முக்கியம்தான். அதற்காக, எந்நேரமும் யாருடனாவது சாட் செய்ய வேண்டும் போன்ற உந்துதல் ஏற்பட்டால், இந்த அறிகுறியை உணர்ந்து உஷாராகிவிடுங்கள். வெற்று சாட்கள் நிச்சயம் உங்களை வீணடிக்கலாம். சில நேரங்களில் தேவையற்ற வம்புகளிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

சில பல சிலிர்ப்பனுபவங்களுக்காக சிலரிடம் மிக நெருக்கமான - அந்தரங்கமான சாட்களை ஆரம்பித்துவிட்டால், அப்புறம் நேரம் போவதும் தெரியாது; உள ரீதியிலான பாதிப்புகள் வருவதும் தெரியாது. பின்னாளில் விளைவுகளை உணரும்போது நிச்சயம் எல்லாம் எல்லை மீறிப் போயிருக்கும்.

எனவே, இந்த விஷயத்தில் மிக மிக உஷராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவரிடம் இருந்து மெசேஜே வராமல் இருந்தாலும், அவரது எண்ணை திறந்து ஏதாவது வந்திருக்கிறதா என்பதை செக் பண்ணுவதும், அவரது டிபி படத்தை அடிக்கடி ஜூம் செய்து பார்ப்பதும்தான் இங்கே முக்கிய அறிகுறி.


5. திட்டமிடாத மல்டி டாஸ்க்


ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்கிறேன் என்ற பெயரில் திட்டமிடாமல் மல்டி டாஸ்கில் ஈடுபடும்போது, எந்த ஒரு வேலையும் முழுமையாக செய்ய முடியாமல் போய், இறுதியில் பல வேலைகளில் சொதப்புவதை உணர்ந்தால், நிச்சயம் நீங்கள் மல்டி டாஸ்கிங் என்ற விஷயத்தை விட்டொழிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் பிரியாரிட்டியை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு வேலையாக செவ்வனே செய்து முடிப்பதைப் பழக்கப்படுத்திக்கொள்வது நலம். அதுவும், அவ்வப்போது மொபைலை நோண்டும் பழக்கம் உள்ளவர்கள், இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாள் முடிவிலும் சில பல வேலைகள் பெண்டிங் இருப்பதை உணர்வதுதான் இந்தச் சிக்கலின் முக்கிய அறிகுறி.


6. உற்சாகமற்ற அதிகாலை

காலையில் கட்டிலை விட்டு எழும்பவே மனம் வரவில்லையா? 10 நிமிடங்களுக்கு ஒருமுறை அடிக்கும் அலாரத்தை அழுத்திவிட்டு மீண்டும் மீண்டும் உறங்குகிறீர்களா? - இவையெல்லாம் அன்றாட நாட்களை எதிர்கொள்ள அஞ்சுவதன் அறிகுறியே. உங்களது வீட்டிலும் வேலையிலும் சுத்தமாக உற்சாகமும் உத்வேகமும் இல்லாததன் விளைவுதான் இந்த அறிகுறி. எனவே, ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.


7. பொன்னேரத்தில் வீணடிக்கும் போர்ன்

காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது என்பர். அந்தப் பொன் போன்ற காலத்தை வீணப்படித்தில் முக்கிய இடம்பிடிப்பது, போர்ன் பார்க்கும் பழக்கம். ஸ்மார்ட்போனில் ஆபாச படங்களை பார்க்கும் வசதியும் வாய்ப்பும் அதிகம் என்பதால் இதில் நம்மில் பலரும் சிக்கிக் கொள்வது உண்டு. இந்த வலையில் சிக்கினால் நம் நேரம் மட்டுமல்ல, நம் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கூட வெகுவாக பாதிக்கும். பிரைவசியான பொழுதுகள் கிடைக்கும்போதெல்லாம் போனில் போர்ன் பார்க்கும் எண்ணம் உதிக்கத் தொடங்குவதே இதற்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்பதற்கான அறிகுறி. உஷார் மக்களே!


8. தள்ளிப்போடுதலும் சாக்குப்போக்கு சொல்லுதலும்

நம் அத்தியாவசிய வேலைகளைக் கூட ‘அப்புறம் பாத்துக்காலம்’ என்று தள்ளிப்போட ஆரம்பித்துவிடுவதும் முக்கியமான அறிகுறிதான். அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்தால் தொழில் ரீதியிலாக வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். இது, சம்பாதிக்கும் திறனையே சீர்குலைத்துவிடும்.

அதேபோல், நாம் செய்த செயல் ஒன்று தவறாக மாறும்போது, அதைத் திருத்திக்கொள்ள முனையாமல் சாக்குப் போக்கு சொல்வதும் ஆரம்பமாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது கிட்டாத ஒன்றாகிவிடும்.


9. உறக்கத்தின் ஒழுங்கின்மை

தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். இந்த அளவுக்கு தூங்க முடியாமல் போவது, சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் எழ முடியாமல் போவது, எந்நேரமும் தூக்க கலக்கத்தில் இருப்பது, தூங்காமல் எந்நேரமும் கண்விழித்துக் கொண்டே இருப்பது என உறக்கத்தில் ஒழுங்கின்மை ஏற்பட்டால் அது நம் உடல் ஆரோக்கியத்துக்கும், மன ஆரோக்கியத்துக்கும் மட்டுமின்றி குடும்ப உறவிலும், வேலை - தொழிலிலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். எனவே, உறக்கத்தில் ஒழுங்குமுறையைப் பின்பற்றுவது அவசியம்.


10. கடந்த காலத்தில் வாழ்தல்


வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால், எதிர்காலம் குறித்த திட்டமிடல் அவசியம். மாறாக, நமக்கு எதிர்காலம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல், நம் கடந்த காலத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டு, ‘அன்று அப்படி இருந்தோம்’, ‘அன்று அதைச் செய்தோம்’ என முடிந்துபோன நாட்களைப் பற்றியே சிந்திப்பதும் பேசுவதுமாக கடந்த காலத்தில் வாழ்வதும் ஓர் அறிகுறிதான். இந்த அறிகுறி தென்பட்டு, அதை வளரவிட்டால், நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் வாழ்க்கையைத் தொலைத்துவிடுவோம்.


11. கவலையும் துக்கமும் சூழ...


சொந்த வாழ்க்கையிலும், தொழில் - வேலை ரீதியிலும் கூட எந்தப் பிரச்சினையும் இல்லாத சூழலில்கூட ஒருவர் காரணமின்றி கவலையும் துக்கமும் கொண்டிருந்தால் அதுவும் இங்கே கவனிக்க வேண்டிய அறிகுறி. எந்த நேரத்திலும் டிப்ரஷன் மோடிலேயே இருப்பது பெசிமிசம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகையோருக்கு ஏதேனும் பிரச்சினை வந்துவிட்டால், அதை நினைத்தே கவலையில் ஆழ்ந்துவிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்தப் பிரச்னை தீர்ந்துவிட்டால், இவர்கள் தங்களை அறியாமலே அடுத்தப் பிரச்னைக்கு காத்திருப்பார்கள், கவலை கொள்வதற்கு. எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் வெற்றியாளர்களாக, மகிழ்ச்சியாளராக வலம் வருவதைப் பார்த்தே இவர்கள் கவலைகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.



12. தற்காதல் கொள்ளாதிருத்தல்


இதுதான் மிக மிக முக்கியம். நம்மை நாமே நேசிப்பது மட்டுமே நம்மை வாழ்க்கையில் வெற்றியாளராகவும், மகிழ்ச்சியாளராகவும் வலம் வர உறுதுணைபுரியும். தன்னைத்தானே நேசிப்பது இல்லை என்பதற்கான அறிகுறிகள் இவை:



சரியான நேரத்துக்கு சாப்பிடாதது

காக்கா குளியல் போடுவது

சுகாதாரம் பேணாதது

ருசித்து சாப்பிடாமல் பசிக்கு கொட்டிக்கொள்வது

நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதை தவிர்ப்பது

நம் தோற்றத்துக்கு முக்கியத்துவம் தராதிருப்பது

ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறையின்றி இருப்பது

அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பிடித்தல்

உடல் ரீதியிலும் மன ரீதியிலும் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்வது


Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை