டிஸ்னியின் இந்த அசத்தல் அனிமேஷன் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

அது என்னவென்று புரியவில்லை  இந்த செல்ஃபி யுகத்திலும் கார்ட்டூன்கள், அனிமேஷன் படங்கள் என்றால் குழந்தைகளுக்கு அவ்வளவு பிரியம். ஃப்ரோஸன், மினியன்ஸ், ஜூடொபியா, பைண்டிங் நீமோ போன்ற அனிமேஷன் படங்களை பார்த்துவளர்ந்த இன்றைய சுட்டிஸ் தவறவிட்டிருக்க வாய்ப்புள்ள டிஸ்னியின் சில பழைய கிளாசிக் அனிமேஷன் படங்களின் லிஸ்ட் இதோ.
ஸ்நோ வொய்ட் அண்ட் தி செவன் டுவார்ஃப்ஸ் (1937)

இன்றும் மிகவும் பிரபலமான கார்ட்டூன் கேரக்டர்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் கேரக்டர் ஸ்நோ வொய்ட். ஸ்நோ வொய்ட்டை வளர்க்கும் மோசமான மாற்றாந்தாய் ராணி, ஸ்நோ வொய்ட் தனது அழகை மிஞ்சிவிடுவளோ என எண்ணி  அடிமையாக வைத்திருக்கிறாள். ஒரு நாள் அவளது மாயக்கண்ணாடி, ‘ஸ்நோ வொய்ட் தான் இந்த ராஜ்ஜியத்தின் மிக அழகிய பெண்’ என ராணியிடம் கூறுகிறது. அதனால் ஸ்நோ வொய்ட்டைக் கொல்ல உத்தரவிடுவாள். அங்கிருந்து தப்பி காட்டில் உள்ள ஏழு குள்ள மனிதர்களின் அடைகலத்தில் வாழும் ஸ்நோ வொய்ட் எப்படி ராணியின் சூழ்ச்சிகளை வென்றாள் என்பதே இப்படத்தின் கதை. இது தான் டிஸ்னியின் முதல் முழுநீள அனிமேஷன் திரைப்படம். வெளியாகி 80 வருடங்கள் ஆகியும் இன்றும் சிறந்த அனிமேஷன் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த படத்தின் உருவாக்கத்திற்காகவே கௌரவ ஆஸ்கார் வால்ட் டிஸ்னிக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றி தான் பல நல்ல அனிமேஷன் படங்கள் பிற்காலத்தில் வரக் காரணமாக அமைந்தது. 1937 ரிலீஸிற்கு பின்னும் 1993 வரை பலமுறை ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது இப்படம்.
பினாக்கியோ (1940)
Add caption
ஸ்நோ வொய்டுக்குப்  பின் ரிலீஸ் ஆன இப்படம் வசூல்ரீதியிலும், விமர்சனரீதியிலும் அதை விட பெரிய வெற்றியை அடைந்தது என்றே சொல்லலாம். மரப்பொம்மையாக இருக்கும் பினாக்கியோவை சிறுவனின் ஆசைக்காக உயிருடன் கொண்டுவருகிறது ஒரு தேவதை, ஆனால் அதே பொம்மை உருவத்தை மாற்றாமல், உண்மையாகவும், தைரியமாகவும், சுயநலமில்லமாலும் இருந்தால் பினாக்கியோவை உண்மையான மனிதனாகவே மாற்றுவேன் எனவும் வாக்களிக்கிறது அந்த தேவதை. பினாக்கியோ உண்மையான பையனாக மாறியதா என்பதே கதை. இந்த ஒன்லைனை  வைத்தே எது நல்லது எது கெட்டது என கதை வழியே குழந்தைகளுக்கு உணர்த்திகொண்டே இருக்கும் இப்படம். இந்தப் படம் தான் போன நூற்றாண்டின் சிறந்த அனிமேஷன் படமெனவே பலரும் கூறியுள்ளனர். இப்படம் 2 ஆஸ்கார்களை வென்றது.
சின்ட்ரெல்லா (1950)
இரண்டாம் உலகப்போரினால் டிஸ்னியும் பெரிய பாதிப்பிற்குள்ளனது. விமர்சகர்கள் பாராட்டியும் படங்களால் வருமானம் ஈட்டமுடியவில்லை. இதனால் கடனில் ஓடும் நிலைக்கே தள்ளப்பட்டது டிஸ்னி. இதிலிருந்து டிஸ்னியை மீட்டது இந்த சின்ட்ரெல்லா படம் தான். சின்ட்ரெல்லாவின் அழகைப் பார்த்து பொறாமைப்படும் மாற்றாந்தாய் என்ற டிஸ்னியின் டெம்ப்லேட் கதை தான் என்றாலும் 1937ன் ஸ்நோ வொய்ட்டுக்குப் பின் நல்ல வசூலை பெற்றது இப்படம் தான்.
தி லிட்டில் மெர்மெய்ட்(1989)
சின்ட்ரெல்லாவுக்குப் பிறகு பெரிய வெற்றி பெற்ற  டிஸ்னி படம். கடல் இளவரசியான 'ஏரியல்' நிலமக்களின் வாழ்வை அறிய விரும்பி நிலத்துக்கு சென்று காதல் வயப்படுவதும்,  உர்சாலா என்ற கடல் சூனியகாரியின் சதிகளுமே படம். மீண்டும் ஒரு டிஸ்னி கதையென்றாலும் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடையிலும், விமர்சகர்களிடையிலும் பெற்றது. இந்தப் படத்தை அனிமேஷனில் தவறவிட்ட மக்கள் விரைவில் வரப்போகும் லைவ் ஆக்ஷன் படத்தில் இந்த கடல் இளவரசியைக் காணலாம்.
தி பியூட்டி அண்ட் தி பீஸ்ட் (1991)
அனிமேஷன் படங்களில் டிஸ்னி தான் தனிகாட்டு ராஜா என்று மீண்டும் உலகுக்கு அழுத்தமாக அறிவித்தது இந்த படம். அழகிய பெண்ணிற்கும், மிருகவுருவம் கொண்ட அசுரனுக்கும் இடையே உண்டாகும் காதலே கதை (‘ஐ’ படத்தின் 'என்னோடு நீ இருந்தால்' கான்செப்ட் தான்). படத்தில் பொருட்கள் கூட கதாபாத்திரங்களாக கதையை நகர்த்தின. சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் அனிமேஷன் படம் இது தான். இப்போது எம்மா வாட்சன் நடித்து கடந்த வாரம் வெளியான 'தி பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' படம் இதன் தழுவலாக டிஸ்னியால் எடுக்கப்பட்டதுதான்.
அலாதீன் (1992)
டிஸ்னியின் மறுமலர்ச்சியில் பெரிய பங்காற்றிய படம் அலாதீன். அரேபியன் நைட்ஸ் கதைகளில் புகழ்பெற்ற ஒன்றான இந்தகதையை பலரும் படமாக்கியுள்ளனர் (தமிழில் கமல், ரஜினி நடித்த படம் நினைவிருக்கலாம்). அலாதீன் கையில் கிடைக்கும் அற்புத விளக்கும் அதில் இருந்து வரும் அனைத்து ஆசையையும் நிறைவேற்றும் பூதமான ஜீனியையும் சுற்றி நடக்கும் சம்பவங்களும், விளக்கை அடைய நடைபெறும் மற்றவர்களின் சூழ்ச்சிகளுமே படம். மிகவும் பிரபலமான இந்தக் கதையை தங்களது நேர்த்தியான தயாரிப்பால் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியது டிஸ்னி. நம்மில் சிலர் இந்த படத்தின் அலாதீன் கார்ட்டூன் சீரிஸை டிவியில் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.
தி லயன் கிங் (1994)
காட்டில் அரசனாக இருக்கும் சிங்கம் முஃபாசா தன் சகோதரன் ஸ்கார் என்ற சிங்கத்தின் சதியால் அரசப்பதவிக்காக கொல்லப்பட, தன்னால் இது நடந்ததாக ஏமாற்றப்பட்டு காட்டிற்கு செல்லும் முஃபாசாவின் மகனான சிம்பா மீண்டும் எப்படி சதிகளை தகர்த்து அரசனாகிறது என்பதே கதை. ஒன் லைன் சாதாரணமாக இருந்தாலும் படத்தின் வழியே அவ்வளவு தத்துவங்களைக் கூறியவாறே சென்றது கதை. இந்த படத்தில்தான் பிரபலமான கதாபாத்திரங்களான டிமோன் அண்ட் பும்பா அறிமுகமானது. இந்தக் காட்டுபூனை மற்றும் காட்டுபன்றியின் 'ஹக்குன மட்டாடா'வாழக்கை ததுத்துவ வாக்கியம் இன்றும் பலர் பயன்படுத்தும் முக்கிய வாக்கியமாகவே இருக்கிறது. இந்தப் படத்தின் இசைக்காக ஹன்ஸ் சிம்மர்க்கு ஆஸ்காரும் கிடைத்தது. இந்த லிஸ்டின் அனைத்து படங்களுமே டிஸ்னி தயாரிப்பின்கீழ் வெளிவந்த படங்கள் மட்டுமே, இதைத்தாண்டி 1990களில் அறிமுகமான ட்ரீம்ஒர்க்ஸ், பிக்ஸார் போன்ற கம்பெனிகளின் ஆரம்பக்கட்ட படங்களில் சிலவற்றைக்கூட நாம் பார்க்கத் தவறியிருக்க வாய்ப்புண்டு.
இதில் பலப் படங்களை  லைவ் ஆக்ஷன் படங்களாக மாற்றுவதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டிவருகிறது டிஸ்னி. ஜங்கிள் புக், சின்ட்ரெல்லா, பியூட்டி அண்ட் தி பீஸ்ட் அதன் தொடக்கம் தான். லயன் கிங், தி லிட்டில் மெர்மெய்ட் என டிஸ்னி வருங்காலத்தின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. அவர்கள் லைவ் ஆக்ஷன் படங்கள் எடுக்கட்டும். அனால் அவற்றை எடுப்பதற்குள் இந்த அனிமேஷன் கிளாசிக்களையும்  பார்த்திடலாமே...!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை