ஆள் பார்த்து பேசணும்!

 ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார்.


ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை.


""யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான்.


கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. ""ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்,'' என்றான்.


ஆபத்தில் கிடந்தவர், ""நன்றியப்பா! விரைந்து வா,'' என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல்,


""தம்பி! நீ பேசியதில் இலக்கணப்பிழை இருக்கிறது. "ஆட்களைக் கூட்டி வருகிறேன்' என்பது நிகழ்காலம். "கூட்டி வருவேன்' என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை, நிகழ்காலமாக்கி விட்டாயே,'' என்றார்.


""சரி சாமி! முதலில், எப்படி பேச வேண்டும் என இலக்கண வல்லுநர்களிடம் போய் கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்களை கூட்டி வருகிறேன்,'' என சொல்லிவிட்டு அவன் போய் விட்டான்.


எந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைத்தான் பேச வேண்டும்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை