"ஹராம்......!
"ஹராம்......!
பதினோறாம் நூற்றாண்டுலே ஒரு புகழ்பெற்ற இறை நேசச் செல்வர் வாழ்ந்து வந்தார். அவர் பேரு அப்துல்லா ஹிஸ் ஸவ்மயி. (ரஹ்) இப்போது சோவியத் ரஷ்யாவுலே உள்ள 'ஜீலான்'ங்கற நகரத்தோட புறநகர்ப் பகுதியிலே 'நீப்'புன்னு ஒரு ஊர். அங்கேதான் அவர் இருந்தார். அவருக்கு ஒரு ஆப்பிள் தோட்டம் இருந்துது. தஜ்லா நதி ஓரத்துலே! அந்தத் தோட்டத்துலே அவரு ஒருநாள் உலாவிக்கிட்டிருந்தார். அந்த சமயத்துலே இருபது வயசுள்ள அழகான இளைஞர் ஒருத்தர் அவரு முன்னாடி வந்து நின்னார்.
"என்னை நீங்க மன்னிக்கணும்"ன்னார். இவருக்கு ஒண்ணும் புரியலே!
"யாரப்பா நீ?
"நீ என்ன கெடுதல் பண்ணினே? நான் எதுக்காக உன்னை மன்னிக்கணும்?" -ன்னு கேட்டார்.
"ஐயா! என் பேரு அபுசாலிக் மூசா! இங்கேயிருந்து நாலு கல் தொலைவுலே இதே "தஜ்லா" நதி ஓரத்துலே தான் நான் இருக்கேன். நேத்து மத்தியானம் எனக்கு நல்ல பசி... அந்த நேரம் ஒரு ஆப்பிள் பழம் நதியிலே மிதந்து வந்துது... அவசரத்துலே அதை எடுத்து சாப்பிட்டுட்டேன். சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் அப்படி செஞ்சது பெரிய தவறுங்கறதை உணர்ந்தேன். ஒரு பொருளுக்கு உரியவர்கள் யாரோ அவங்க அனுமதியில்லாமே அந்தப் பொருளை உண்பது 'ஹராம்' கும். 'ஹராம்' ன அந்தப் பழம் என் வயத்துக்குள்ளே போனதுலேயிருந்து எனக்கு நிம்மதியில்லே! ராத்திரி பூரா தூங்கவே முடியலே!
காலையிலே எழுந்திரிச்சதும் இந்த நதி ஓரமா பார்த்துக்கிட்டே வந்தேன். உங்க தோட்டத்தைப்
பார்த்தேன். ஒரு மரத்தோட கிளை தண்ணியைத் தொட்டுக்கிட்டிருக்கிறதைப் பார்த்தேன். அதனாலே நான் சாப்பிட்ட பழம் இங்கே இருந்துதான் வந்திருக்கணும் அந்தப் பழத்துக்கு உரியவர் நீங்கதான். 'நீங்க என்னை மன்னிச்சாதான் நான் உண்ட பழம் 'ஹலால்' கும். குற்றம் நிவர்த்தியாகும். தயவு பண்ணி மன்னிக்கணும்!"ன்னு கண்கலங்க கேட்டுக்கிட்டார்.
இதைக் கேட்ட 'ஸவ்மயி' ஆச்சரியத்தோட அந்த இளைஞரை கூர்ந்து கவனிச்சார்.
" இந்த அளவுக்கு நேர்மையான ஒரு நல்ல மனுஷனை விட்டுடப்புடாது...!'ன்னு மனசுக்குள்ளே முடிவு பண்ணினார். நிமிர்ந்து அந்த இளைஞரைப் பார்த்தார்.
"இதற்கு நீ, நான் தரும் தண்டனையை ஏத்துக்கத்தான் வேணும்!"ன்னார்.
"எதுவா யிருந்தாலும் ஏத்துக்கத் தயார்!"ன்னார் அவர்.
இறை நேசச் செல்வர் அப்படி என்ன தண்டனை கொடுத்தார்?
"தனது கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிடச் சிறந்த உணவு ஏதுமில்லை. " என்கிறார்
- நபிகள் நாயகம் (ஸல்). அதனால நீ செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடணும்ன்னு நீ நெனச்சா நாஞ் சொல்றபடி நீ நடக்கணும்", என்று சொல்லிவிட்டுச் சொன்னார்.
"நீ செய்த காரியத்துக்குத் தண்டனையா பன்னிரண்டு வருஷ காலம் நீ இங்கே பணிவிடைகள் செய்யணும்!"ன்னார்.
"பணிவிடை செய்யறத பாக்கியமா நினைக்கிறேன்"னு சொல்லீட்டு மகிழ்ச்சியோட அந்த தண்டனையை ஏத்துக் கிட்டார்.
பன்னிரண்டு வருஷம் முடிஞ்சிது... அந்த 12 வருஷ காலத்துலே அந்த இளைஞரோட வயசும் தகுதியும் வளர்ந்துது...! கடைசியிலே அந்தப் பெரியவர் அந்த இளைஞரைக் கூப்பிட்டார்.
"இதோ பாருப்பா... இன்னையோட உன் பணி விடைக்காலம் பன்னிரெண்டு வருஷம் முடிஞ்சிது. ஆனா தண்டனை இதோட முடிஞ்சுட்டதா நினைக்காதே; அது இன்னும் முடியலே! கடைசியா இன்னும் ஒரு தண்டனை பாக்கியிருக்கு... அதை நீ ஏத்துக்கணும்!"ன்னார்.
"எதுவாயிருந்தாலும் ஏத்துக்கறதுக்கு சித்தமாயிருக்கேன்!"னார் இவர்.
"எனக்கு ஒரு மகள் இருக்கா... அவளுக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. ரெண்டு காதும் கேக்காது, ரெண்டுகாலும் செயல்படாது அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணும்!"ன்னார் பெரியவர்.
இதைக் கொஞ்சமும் இவர் எதிர்பார்க்கலே... ஒரு நிமிஷம் திகைச்சார். அடுத்த நிமிஷம்
"சரி! இதையும் நான் மனப்பூர்வமா ஏத்துக்கறேன்!"னார்.
இறைநேசச் செல்வர் " ஸவ்மயி " அவர்களின் புதல்வி பாத்திமாவுக்கும் இளைஞர் அபுசாலிக் மூசாவுக்கும் அடுத்த சில தினங்கள்லே முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு
மணமகளை பார்த்த அந்த இளைஞர் திகைச்சுப் போயிட்டார். ஏன்னா அந்தப் பெரியவர் சொன்னதுக்கு நேர்மாறா இருந்தார் பாத்திமா. உடல் ஊனம் எதுவுமில்லே. ரொம்ப அழகாயிருந்தாங்க.
மறுநாள் 'ஸவ்மயி' அபுசாலிகைக் கூப்பிட்டு இதுக்கு விளக்கம் சொன்னார்.
"என் மகளுக்கு கண்ணு தெரியாதுன்னு சொன்னேன். எந்த வித தீய காட்சிகளும் அவள் கண்ணுக்குத் தெரியாதுன்னு அர்த்தம். காது கேட்காதுன்னு சொன்னேன். தீய விஷயங்களை அவள் கேட்கமாட்டாள்ன்னு அர்த்தம். கால்கள் செயல்படாதுன்னு சொன்னேன். வீட்டைவிட்டு தீமையான இடங்களுக்கு அவள் போக மாட்டாள்ன்னு அர்த்தம்ன்னார்.
"12 வருஷத்துக்கு முன்னாடி உன்னை முதல்முறையா பார்த்தப்பவே உம்மை என் சீடராக மானசீகமா ஏத்துக்கிட்டேன்!"ங்கற விவரத்தை சொன்னார்.
இந்த இளைஞர் அபுசாலி பிற்காலத்துலே ஒரு பெரிய ஆன்மீக மேதையா உயர்ந்தார். அந்தத் தம்பதிகளின் 60-வது வயசுலே ஒரே ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் ஆன்மீகப் பேரரசர் முகயித்தீன் அப்தூல் காதர் ஜீலானி (ரலி). முகையத்தீன் ஆண்டகை! இறைநேசச் செல்வர்களுடைய வாழ்க்கைதான் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டணும்.
நாமள்ளாம் அப்படியா இருக்கோம். எனக்கு ஒரு சிநேகிதன்... அவன் சொன்னான்...
"டேய்! என்னுடைய மாமனார்கூட, தன்னோட பொண்ணை எனக்கு திருமணம் பண்ணிக் குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு செய்தியைச் சொன்னார். அது 'பொய்'ன்னு அப்புறமாதான் தெரிஞ்சிது!"ன்னார்.
"என்ன சொன்னார்?"ன்னு கேட்டேன்.
"எம் பொண்ணு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது...... கோவம் வந்து...... கையிலே கிடைக்கறதை எடுத்து உங்க மேலே எறிவா! நீங்கதான் அனுசரிச்சி நடந்துக்கணும்ன்னார்" அப்படின்னான்.
"அப்படி அவர் சொன்னது பொய்யா?"ன்னு கேட்டேன்.
"ஆமாம்! மாசம் ஒரு தடவைன்னு அவர் சொன்னது பொய். தெனம் ஒரு தடவை அப்டி செய்யறா?" அப்படின்னான்.
Comments
Post a Comment