குழந்தைகள் பார்க்கக் கூடாத வீடியோக்கள்

கற்பிதமல்ல பெருமிதம் 34: குழந்தைகள் பார்க்கக் கூடாத வீடியோக்கள் 

மா 

தி இந்து, டிசம்பர் 2, 2018 

மதிய உணவு இடைவேளை நேரம். சாப்பிட்டு முடித்து ஏழாம் வகுப்பு மாணவிகள் ஜன்னலுக்கும் 
கதவுக்கும் இடையில் இருந்த சுவரில் சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். 
புவனா டீச்சர் மிக இயல்பாக நடப்பதுபோல் சூழலைக் கவனித்தபடி மெதுவாக வகுப்பறை களைத் 
தாண்டி நடந்தார். 
ஏய் எப்படிடீ நீ அந்த மாதிரி படமெல்லாம் பாக்குற. எங்கே இருந்து கிடைக்குது? 
யூடிபி-ல் எக்கச்சக்கமா வீடியோ வரும். 
புவனா டீச்சர் நிமிர்ந்து எந்த வகுப்பு என்று பார்த்தார். ஏழாம் வகுப்பு பி பிரிவு. உடனே 
உள்ளே போய் யாரென்று பார்ப்பதா என யோசிப்பதற்குள் பெல் அடித்தது. தபதபவென்று மாணவ 
மாணவியர் ஓடிவர ஆரம்பித்தனர். ஆசிரியர்கள் அறைக்கு வந்தார் புவனா டீச்சர். உதவித் தலைமை 
ஆசிரியர் உமாமகேஸ்வரி ஏதோ யோசித்தபடி உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய் சொன்னார். 
புவனா டீச்சர் எதிர்பார்த்த அதிர்ச்சி ரியாக்‌ஷன் உமா டீச்சரிடமிருந்து வரவில்லை. 
எப்படி டீச்சர் நான் சொன்னதைக் கேட்டு இவ்வளவு கூலா இருக்கீங்க? 
சின்ன கோடு, பெரிய கோடு தத்துவம்தான். இப்பதான் எட்டாம் வகுப்பு சந்தியா டீச்சர் ஒரு 
பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போனார். அதுக்கு முன்னாடி நீங்க சொன்ன விஷயம் 
சின்னதா தெரியுது. 
என்ன ஆச்சு டீச்சர்? 
எட்டாவது படிக்கிற ஒரு பொண்ணுக்கும் அவங்க ஏரியாவில இருக்கற ஒரு பையனுக்கும் கடந்த 
ஒரு வருஷமா உறவு இருக்கு. 
எட்டாம் வகுப்புல காதல் என்பது இப்ப நாம கேள்விப்படற, பார்க்கற  விஷயம்தானே. 
அய்யோ டீச்சர், உறவுன்னு நான் சொன்னது காதல் பத்தி இல்லை. நேரடியான உடல் உறவு. காலையில 
இருந்து மூணு மணி நேரமா இதே பஞ்சாயத்துதான். அந்தப் பெண்ணைப் பேச வைக்கறதுக்குள்ள 
பெரும்பாடாப் போச்சு. 
எப்படி டீச்சர் இந்த வயசுல? 
நீங்க சொன்னதுதான். இந்த மாதிரி வீடியோ படங்களைப் பார்த்ததா சொல்றா அந்தப் பொண்ணு. அவளோட 
தெருவுல இருக்கற ஒரு பையன் அவகிட்ட நெருங்கிப் பேச ஆரம்பிச் சிருக்கான். ரெண்டு 
பேருமா சேர்ந்து இதைச் செஞ்சிருக்காங்க. 
இப்ப என்ன பண்றது டீச்சர்? 
இந்த மொபைல் போன் கலாச்சாரம் வந்தபின் பிரச்சினை அதிகமாகிக்கிட்டே போகுது. 
மொபைல்போனால் வந்திருக்கக்கூடிய இந்தப் பிரச்சினையைப் பெரியவர்கள் காலம் கடந்துதான் 
உணர்கிறார்கள். 
போன வாரம் ரயிலில் வந்தபோது இரவு 12 மணி இருக்கும். எதிர் இருக்கையில் இருந்த குழந்தை 
சிணுங்கிக்கொண்டே இருந்தது. பெரிதாக அழக்கூட இல்லை. அந்தக் குழந்தை இரண்டு 
வயதுக்குள்தான் இருக்கும். 
குழந்தையின் அம்மா, தன் அம்மாவைப் பார்த்து அதை எடும்மா என்றாள். 
பால் புட்டியாக இருக்குமோ என்று பார்த்தேன். குழந்தையின் பாட்டி கொடுத்ததோ ஒரு மொபைல் போன். 
ஒரு வீடியோ எடுத்து, குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, அதன் முகத்துக்கு நேராக 
மொபைலை நீட்டினார் அம்மா. குழந்தையும் படுத்தபடி மொபைலைப் பார்த்தது. இந்த மொத்த 
விஷயமும் நிகழும்போது அம்மா, குழந்தையோடு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. 
தவறு யாருடையது? 
குழந்தைக்கு ஒரு வயதிலேயே டி.வி.யை, மொபைலைப் பெரியவர்கள் பழக்கி விடுகிறார்கள். 
இந்தக் குறிப்பிட்ட பாட்டு கேட்டால்தான் என் குழந்தை சாப்பிடும் என்பது குழந்தையின் 
பிரச்சினை அல்ல. 
குழந்தைக்கு இந்தப் பழக்கத்தைப் பழக்குவது யார்? பேசி, பாட்டுப் பாடி, கதை சொல்லி, 
குழந்தையோடு கொஞ்சி விளையாடத் தெரியவில்லை. நமக்குப் பொறுமையும் இல்லை. 
குழந்தைகளோடு கொஞ்சிப் பேசி, அவர்கள் ‘மூடு’க்கு ஏற்ப உரையாட, உறவாடத் தெரியவில்லை. 
ஆனால், யோசித்துப் பாருங்கள். ஒரு வயதில் இருந்து இப்படி ஒலி, ஒளிக்குப் பழக்கிவிட்டுக் 
கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்கள் மொபைல் பார்ப்பது, டி.வி. பார்ப்பது குறித்துக் 
கட்டுப்பாடுகள் விதிக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது? 
பழக்கத்தை உண்டாக்கியது நாம்தானே. குழந்தை அழும்போது, அதற்குப் படம் காண்பித்தால் 
அழுகையை, அடம் பிடிப்பதை நிறுத்துகிறது என்கிறீர்கள். அப்படி ஒன்றைக் காண்பிக்காமல் 
ஆரம்பத்தில் இருந்து வேறு வழிகளில் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாதா? நாம் 
குழந்தைகள் மேல் பழியைப் போடுகிறோம். உண்மையில் பிரச்சினை நம்மிடம்தான் உள்ளது. 
இரண்டு வழிகள் 
இப்படி அசையும் ஒளிப்படங்களுக்குப் பழகிய குழந்தை, 12 வயதிலும் குழந்தைப் பாடல்களையும் 
கார்ட்டூனையுமா பார்க்கும்? 
தனது வயதுக்கே உரிய குறுகுறுப்புடன் வேறு விஷயங்களைப் பார்க்கத் தொடங்கும். பார்ப்பதன் 
விளைவாக உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் சிறுவர், சிறுமியர் அதைச் செய்து 
பார்க்கவும் விழைவார்கள். 
உணவு, உடை, டி.வி. மொபைல் பயன்பாடு என எல்லாவற்றிலும் பெரியவர்கள் ஒரு கட்டம்வரை 
தமது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குழந்தைகளை அடிபணிய வைக்கிறார்கள். குழந்தைகள் கொஞ்சம் 
பெரியவர்களாகி, அவர்களுக்குள் சுய சிந்தனை, தன்மானம், சுயசார்பு வந்து விட்டதாக உணரத் 
தொடங்கும்போது தங்கள் எதிர்ப்பை வார்த்தைகளிலும் செயல்களிலும் காட்டத் தொடங்குகிறார்கள். 
பெரியவர்களுக்குத் தெரிந்தது இரண்டே வழிதான். அடக்குவது அல்லது குழந்தைகள் அவர்களைக் 
கையாள ஆரம்பித்துவிட்டால் புலம்பிக்கொண்டே ஈடுகொடுப்பது. சினி மாவை, டி.வி.யைத் 
திட்டுவது. 
நம் குழந்தைகள் இன்று எலக்ட்ரானிக் யுகக் குழந்தைகள் ஆகிவிட்டார்கள். நமக்கும் 
அவர்களுக்குமான பிணைப்பு வலுப்பதற்குப் பதிலாக விலகிக்கொண்டே போகிறது. 
வளரிளம் பருவத்துக் குழந்தைகள் இப்படிச் சின்னஞ்சிறு வயதிலேயே பாலியல் உணர்வுகளுக்கு 
ஆட்படுவது, கலக்கத்தைத் தருகிறது. ஆனால், ஒன்றும் செய்யாமல் சூழல்மேல் பழிபோடுவதால் 
பிரச்சினை தீரப்போவதில்லை. 
என்ன செய்யலாம்? 
குழந்தைகளோடு பேசுங்கள். சிறு குழந்தையை வைத்திருப்பவர்கள், எவ்வளவுக்கு எவ்வளவு 
தாமதமாக இந்த எலக்ட்ரானிக் கருவிகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த முடியும் என்று 
பாருங்கள். ஏற்கெனவே குழந்தைகளுக்கு இவற்றைப் பழக்கிவிட்ட பெற்றோர், அவர்களோடு எப்போது 
பார்க்கலாம், என்னவெல்லாம் பார்க்கலாம் என்ற கூட்டு ஒப்பந்தத்துக்கு வாருங்கள். 
நீங்கள் முடிவுசெய்து அதை அவர்கள் மேல் திணிப்பதல்ல. கூட்டு ஒப்பந்தம் என்பது அவர்களோடு 
சேர்ந்து உடன்பாட்டுக்கு வருவது. 
குழந்தைகள் கம்ப்யூட்டர் வேண்டும், பாடங்களுக்கு நோட்ஸ் எடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடும். 
பாடப் புத்தகங்களில் எல்லாம் இருக்கிறது. ஏதாவது வேறு பொதுத் தலைப்புகளில் 
தேவைப்பட்டால், உங்கள் கம்ப்யூட்டரைக் கொடுத்து, உடனிருந்து வழிகாட்டுங்கள். 
குழந்தைகள் மீதான உங்கள் கவனம், கண்காணிப்பாக இருக்கக் கூடாது. தோழமையுடன் இருக்க வேண்டும். 
எதுவாக இருந்தாலும் பெற்றோருடன் பகிரலாம் என்ற உணர்வை உருவாக்குங்கள். ஏதாவது 
பேசவரும்போது, இதையெல்லாம் நீ பேசக் கூடாது என்று சொல்லிவிட்டால் அவர்கள் பேசுவதை 
நிறுத்த மாட்டார்கள். உங்களுக்குத் தெரியாமல் பேசுவார்கள். 
அப்படிப்பட்ட மனோபாவம் அவர்களுக்கு வந்துவிட்டால், நம்மால் அவர்களுக்கு உதவ முடியாது. 
எந்தவித முன் தீர்மானங்களும் இல்லாமல் அன்போடு, நட்போடு, குழந்தை களுக்குச் செவிகொடுங்கள். 
இரவு உறங்கப் போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே மொபைல் போன் பயன்பாட்டை 
நிறுத்திவிடச் செய்யுங்கள். இரவில் நீங்கள் உறங்கிய பிறகு உங்கள் மொபைல் போனை 
எடுக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாகக் குழந்தைகளுக்குத் தனி மொபைல்போன் பள்ளிப் 
பருவத்தில் தேவையில்லை. அப்படியே அவர்களைத் தொடர்புகொள்ளத் தேவையென்றாலும் ஆண்ட்ராய்டு 
வசதி இல்லாத மொபைல் போதும். 
ஏற்கெனவே வாங்கிக் கொடுத்திருக்கும் பெற்றோர், குழந்தைகளோடு பேசி போன் பயன்பாட்டின் 
எல்லைகளை உருவாக்குங்கள். 

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ