கற்கண்டு கணிதம்

பாட்டி வீட்டுக்கு 

கிராமத்துக்கு போன இடத்துல செல்வியும் கவிதாவும் அப்படியே ஊர சுத்திட்டு வர்றாங்க. 

லெகின்ஸும் டாப்ஸும் போட்டிருக்கிறத பாத்தாலே டவுன்ல இருந்து வர்ற பசங்கன்னு ஊர் மக்களுக்கு தெரியுது. 

செல்விக்கும் கவிதாவுக்கு வெக்கமாத்தான் இருக்கு இருந்தாலும் ஊர் அழகா இருக்கிறதால சுத்திட்டு இருக்காங்க. 

அங்க ஊருக்கு மத்தில ஒரு கிணறு இருக்கு. 

அது பக்கத்துல நின்னு பாதுகாப்பா எட்டி பாக்குறாங்க. 

பயமாவும் இருக்கு பரபரப்பாவும் இருக்கும்.

“என்ன கிணத்துல தங்கம் கிடக்கான்னு பாக்கீங்களா அங்க தண்ணிதான் இருக்கும்”

அது கிராமத்துல உள்ள பெரியவரு குரல்..

செல்வியும் கவிதாவும் சிரிக்கிறாங்க.

பெரியவரு தொடர்ந்து கேக்குறாரு... 

“நீங்க படிச்ச பிள்ளைகள்தான. இந்த கிணத்தோட ஆழம் சொல்லுங்க பாப்போம்”

“..............”

இப்ப அங்க கூட்டம் கூடியிருது. அதுல ஒருத்தர் சொல்றாரு

“இதுங்க எல்லாம் ஏட்டு சுரைக்காய்ங்க.. கிராமத்து அறிவெல்லாம் டவுன்களுக்கு வருமா”

இதுக்கும் கூட்டம் சிரிக்குது.

இப்படி ஒரு நிமிசத்துல செல்வியையும் கவிதாவையும் கூட்டம் கிண்டல் பண்ணிட்டே இருக்கு. 

இப்ப செல்வி ஒரு கல்ல எடுக்குறா.

“ஏய் இவ நம்மள அடிக்கத்தான் கல்லெடுக்கா டோய்” ன்னு கூட்டம் சிரிக்குது.

ஆனால் செல்வி கல்ல எடுத்து கிணத்துல போடுறா. 

இப்ப சொடக்கு போடுறா..

ஒண்ணு, ரெண்டு, மூணு... கல்லு தண்ணில படுற சத்தம் கேக்குது.

இப்ப இன்னொரு கல்லு... ஒண்ணு, ரெண்டு. முணு... கல்லு தண்ணில படுற சத்தம் கேக்குது. 

”தோராயமா 120 அடி இருக்கும்” செல்வி சொல்றா.
கூட்டம் அமைதியா ஆச்சரியமா பாக்குது.

“ஏய் கரெக்ட்டா சொல்லிட்டாப்பா. டவுன்காரங்க டவுன்காரங்கதாப்பா” இப்படி பாராட்டிட்டே இருக்கும் போது செல்வியும் கவிதாவும் கூட்டத்த தள்ளிட்டு வெளிய வந்து நடக்குறாங்க.. 

பின்னாடியே மூணு பையன்ங்க “அக்கா நில்லுங்க அக்கா நில்லுங்கனு” ஒடி வர்றாங்க.
செல்வியும் கவிதாவும் நிக்குறாங்க.

“அக்கா எப்படி கண்டுபிடிச்சீங்க”

“கல்ல தூக்கிப் போட்டு தண்ணில விழுற நேரத்த கணக்கு பண்ணிட்டு , எவ்வளவு விநாடி வருதோ அத அதே எண்ணால பெருக்கிட்டு, அத அஞ்சால பெருக்கிட்டா அதுதான் ஆழம்”

“எல்லா கிணத்துலையும் அதுதான் முறையாக்கா”

“ஆமாப்பா. அதுதான் முறை. தண்ணில விழுற நேரத்த கல்லப் போட்டு கணக்கெடு.. வர்ற நேரத்த இன்னொரு தடவ அதாலேயே பெருக்கு... மூணு விநாடின்னா அத இன்னொரு மூணால பெருக்கு... வர்ற விடைய அத அஞ்சால பெருக்கிரு.பெருக்கினா அத்தன மீட்டர் ஆழம்னு பொருள். கவனிச்சிக்க அடி இல்ல மீட்டர்தான். மீட்டர அடியா மாத்தனும்னா அத இன்னொரு மூணால பெருக்கனும் ”

இப்படி சொல்லிட்டு நடக்குறாங்க.

கவிதா கேக்குறா. 

“எப்படி நேரத்தோட வர்க்கத்த (Square) அஞ்சால பெருக்கினா போதும்னு சரியா சொல்ற”

“அதுவா ஒரு பொருள தூக்கி வீசுறோம்னு வெச்சிக்க. அது எவ்வளவு தூரம் போகுதுன்னு எப்படி கணக்கு போடுவோம் தெரியுமா”

”எப்படி”

“அதுக்கொரு ஃபார்முலா இருக்கு. அதுதான் 
S= ut + 1/2 at²”
“ஒஹ்”
“இதுல S = தூரம் 
 t நேரம்
a ங்கிறது புவியீர்ப்புனால வர்ற முடுக்கம் ( acceleration). அது 9.8 m/s² "

"ஒஹ்” 

“இங்க கல்லு முதல்ல கைல இருக்கிறதால அந்த u இருக்கு பாத்தியா அதோட மதிப்பு 0 தான். அப்போ இந்த  ஃபார்முலா இப்படி மாறும்”

“ S= 1/2 at²” இப்படி மாறிரும்...ஏன்னா (ut = 0 x t = 0) அப்படித்தானே செல்வி”

”ஆமா இதுல a மதிப்பு தெரியும் அது  9.8 m/s²
t மதிப்புதான் கிணத்துல கல்லு போட்டு கண்டுபிடிச்சேன். அது மூணு விநாடி... 3 seconds"

"ம்ம்ம்”

“இத எல்லாத்தையும் ஃபார்முலாவுல போட்டேன் 
1/2 x 9.8 x 3 x 3 = 44.1 மீட்டர் வருமா.. அத மூணால பெருக்கினா அடி வருமா...  44 x 3 = 132 ...நான் கொஞ்சம்  குறைச்சி 120 அடின்னு சொன்னேன். சரியா வந்துச்சு”

“சூப்பர் செல்வி... எவ்வளவு அறிவு உனக்கு . அதிருக்கட்டும் ஆனா அந்த பசங்க கிட்ட ஏன் நேரத்த அஞ்சால பெருக்கி ஆழம் கண்டுபிடிக்க சொன்னே.. இங்க ஃபார்முலா வேற மாதிரி சொல்ற... ”

“ இங்க பாரு ... 1/2 x 9.8 x 3 x 3  இதுல 
(1/2 x 9.8 ) x 3 x 3  மட்டும் எடுத்துக்க... இந்த 9.8 மதிப்ப நான் வசதிக்காக 10 அப்படின்னு எடுத்துகிட்டேன். அப்போ  1/2 x 10 = 5 தானே... அப்ப 5 x 3 x 3 அதான் சுருக்கமா சொல்லிட்டேன். எல்லா பிராகடிக்கல் சென்ஸ்தான் கவிதா “

கவிதா அப்படி செல்விய கட்டிக்கிட்டா....

”நாம படிக்கிறது எட்டாங் கிளாஸ் ... இதெல்லாம் எங்க படிச்ச நீ”

“அக்காவோட +1 பிசிக்ஸ் புக்ல இருந்துச்சு. சும்மா புரட்டிப் பார்க்கும் போது அப்படியே படிச்சதுதான். சயின்ஸ் அறிவு மட்டும் இருந்தா தூரம் என்ன.. எதையும் கண்டுபிடிக்கலாம். கிராமத்து அனுபவ அறிவுன்னு அவுங்க பெருமைப்படுறது ஒக்கே. ஆனா கிராமத்து அனுபவ அறிவு இருக்குன்னு மெக்காலே சொன்ன முறையான அறிவியல் கல்வியை கற்காம இருக்கிறது சரியானது கிடையாது. அதான் கல்லப் போட்டு சரியா சொல்லி அறிவியல் அறிவு பெரிசுன்னு சொல்லாம சொல்லிட்டு வந்தேன்” இப்படி செல்வி சொல்லும் போது 

அங்க அவுங்க பாட்டி வர்றாங்க...

“என்ன பிள்ளைகளா நம்ம கிராமத்துல நல்லா கத்துகிட்டீங்களா”

அதுக்கு கவிதா 

“இல்ல பாட்டி கிராமத்துக்கு நல்லா கத்துக்குடுத்துட்டு வந்திருக்கோம்... “

“என்ன கத்துக் கொடுத்தீங்க”

“பிளஸ் ஓன் பிஸிக்ஸ் பாட்டி... “ 

சொல்லிட்டு சிரிக்கிறாங்க...

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை