Change Yourself, Not The World!

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.


பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள். சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள். சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான். “இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார். “ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி.


“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான். “மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி😎 வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

 நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY

Nothing can compete with The knowledge gained from poor, confidence