What is true beauty?

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.

"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.

நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?

நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார். அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.

வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.

ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.

அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...

அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான்.

உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்!

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ