நம்பிக்கை

பார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே!அப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே? அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா?ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்?''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்?திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தான்.அதிசயித்த அனைவரும் அவனிடம்,''நீ பாவம் ஏதும் செய்ததில்லையா?''என்று கேட்டனர்.அவனும்,''நானும் பல பாவங்கள் செய்துள்ளேன்.ஆனாலும் கிழவி அழுதது என்னால் தாங்க முடியவில்லை. மேலும்,கங்கை நீர் பட்டாலே செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே,அப்படியானால் நான் நீரில் குதித்தவுடனேயே என் பாவங்கள் நீங்கி இருக்கும் அல்லவா?''என்று கேட்டான்.அனைவரும் தலை குனிந்தனர்.இப்போது சிவன் பார்வதியிடம் சொன்னார், ''எல்லோரும்தான் கங்கையில் குளித்தால் பாவம் நீங்கும் என்று சொல்லுகிறார்கள்.ஆனால் அவன் ஒருவன் தானே அதை நம்பினான்.நம்பியவருக்கு மட்டுமே கைலாயத்தில் இடம் உண்டு.''பார்வதியின் சந்தேகம் நீங்கியது.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை