தயங்காதே... தளராதே...!

நன்றாக படிக்கக் கூடிய எட்டாம் வகுப்பு மாணவன் அவன்; ஆனால், குடும்பத்திலோ வறுமை. தினம், 10 கி.மீ., நடந்து போய் தான், படிக்க வேண்டும்.
சில சமயம் சைக்கிளிலும், எப்போதாவது பஸ்சிலும் செல்வான். அப்போது, பஸ் கட்டணம் கால் ரூபாய் தான் என்றாலும், அதையும் கணக்கு பார்க்க வேண்டிய குடும்ப சூழல்.
பிராமணர் என்பதால், ஊக்கத்தொகைக்கும், உதவி தொகைக்கும் வழியில்லை; விடுதியில் தங்குவதற்கோ விதி இடம் தரவில்லை. இதனால், பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்ற அவன், 'சார்... தினமும் 10 கி.மீ., நடந்து, பள்ளிக்கு வந்து போவது சிரமமாயிருக்கிறது; பஸ்சை எதிர்பார்த்தா, அம்மா பட்டினி கிடக்க வேண்டி வரும். இலவசமாய் விடுதியில் இடம் கிடைக்குமானால், எங்கள் குடும்பமே உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பர்...' என்று, கெஞ்சினான்.
அவனது நிலையை அறிந்த ஆசிரியர், 'உனக்கு உதவணும்ன்னு எனக்கும் விருப்பம்தாம்பா...ஆனா, நான் சிபாரிசு செய்யணும்ன்னா, நீ வகுப்புல முதல் மாணவனாக வரணும்; நல்லா படிச்சு, மார்க் எடு பாக்கலாம்...' என்றார்.
அவனும் சந்தோஷத்துடன், 'எல்லா பாடத்திலயும் நிச்சயமாய் முதலாவதாக வருவேன்...' என்று கூறிச் சென்றான்.
அதே போன்று உற்சாகமாய் படித்து, தேர்வு எழுதினான்.
அன்று கடைசி தேர்வு...
முதுகில் புத்தக மூட்டையுடனும், நெஞ்சில் கனவுகளுடனும் பஸ்சிற்காக காத்திருந்தான். 10:00 மணிக்கு தேர்வு; 9:00 மணிக்கு வர வேண்டிய பஸ், 9:30 மணி வரை வரவில்லை.
'கடவுளே... இது என்ன சோதனை. நேரத்திற்கு போகவில்லையென்றால் தேர்வு எழுத விடமாட்டார்களே... இனியும் பஸ்சை நம்பி பிரயோஜனமில்ல...' என்று நினைத்து வீட்டிற்கு ஓடியவன், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஓட்டை சைக்கிளை எடுத்து, மிதிக்க ஆரம்பித்தான்.
சுமார், 2 கி.மீ., போயிருப்பான்; டயர் பஞ்சர். இன்னும், 8 கி.மீ., போக வேண்டும். நேரமோ, 10:00 மணியாகி விட்டது.
சைக்கிளை அப்படியே கடை ஒன்றில் போட்டுவிட்டு, முதுகில் இருந்த புத்தக மூட்டையுடன் ஓட ஆரம்பித்தான், ஓடுகிறான்... ஓடுகிறான்... அப்படி ஒரு பேயோட்டம்.
அவன் ஓடிக்கொண்டே இருக்கட்டும்; அவன் இலக்கை அடைந்தானா என்பதை, பிறகு பார்ப்போம்.
உலக நாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த, அதிலும் தமிழகத்தை சேர்ந்த சாதனையாளர்கள் பலர், நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருந்தாலும், அரபு நாடுகளில் மட்டும் இந்தியர்கள் தொழில், அறிவியல், மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் முதன்மை பதவியில் அமர்த்தப்படுவது அபூர்வம். எல்லாமே நாம் செய்து கொடுத்தாலும், பதவி மட்டும் உள்ளூர்வாசிகளுக்குத் தான்!
இதற்கு விதிவிலக்காக இருப்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சீதாராமன். தோஹா வங்கியின் தலைவராக, உலக அளவில் அவ்வங்கியை வளர்த்து, எல்லாராலும் வியந்து பார்க்கப்படும் மனிதர்.
அவரது மிடுக்கும், கம்பீரமும் பிறரை அசர வைத்தாலும், இந்தியர்கள் என்றால், அதிலும் தமிழர் என்றால் அப்படியே உருகி விடுவார். 
கத்தார் நாட்டில் எந்த இந்திய நிகழ்ச்சி என்றாலும், உடனே கை கொடுப்பார். எளிமையும், இளகிய மனமும் கொண்ட இவர், எளிதில் பிடிக்க முடியாத அளவிற்கு, எப்போதும் பிசினஸ் விஷயமாய் உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்.
குவைத்தில், 'பிரன்ட் லைனர்ஸ்' விழாவிற்கு தலைமை விருந்தினராக அழைத்தவுடன், தன் மற்ற பயணங்களை மாற்றி வைத்து, உடனே ஒப்புதல் தந்தார்.
சீதாராமன் வருகிறார் என்றதும், பல அமைப்பினரும், இந்தியப் பள்ளிகளும் அவரை உரையாற்ற அழைத்தனர். ஆனால், குவைத்தில் அவர் தங்கப் போவது ஒரு நாள் தான் என்றதும், பலருக்கும் ஏமாற்றம்.
இந்த விவரத்தை அவருக்கு தெரிவித்ததும், நிகழ்ச்சிக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, சீதாராமனிடமிருந்து அழைப்பு. 'குவைத்திற்காக நான் மூன்று நாட்கள் ஒதுக்கியிருக்கிறேன்; எங்கள் வங்கி நிகழ்ச்சியை முதல்நாள் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறேன். மீதம் இரண்டு நாள், உங்களுக்காக... என்னுடன் என் தாயார், மனைவி மற்றும் மகளும் வருகின்றனர்...' என்றார்.
அன்று வங்கி சார்பாக, பலரின் அப்பாயின்மென்ட்கள் இருக்க, சீதாராமன் அவர் களுக்கு, 'கடுக்காய்' கொடுத்து, இந்திய பள்ளி மற்றும் இந்திய தூதுவர் சந்திப்பு என, நேரம் ஒதுக்கித் தந்தார்.
'பிரன்ட் லைனர்ஸ்' புத்தகத்தின், 17ம் தொகுதியை நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் வெளியிட, சீதாராமன் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு; இருவருக்கும் பல ஆண்டு நட்பு இருந்ததால், இருவருமே ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தனர்.
காலையில் கலந்துரையாடல்; மாலையில் புத்தக வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள். இரண்டுக்குமே சீதாராமனின் தாய், மனைவி மற்றும் மகள் வந்திருந்து ரசித்தனர்.
மலர்ந்த முகத்துடன் காட்சியளித்த அவரது தாயை மேடைக்கு அழைத்து நாங்கள் கவுரவிக்க, கைதட்டல் ஓயவில்லை. அதற்கு காரணம், வறுமையிலும் கூட, சீதாராமனை வளர்த்து, வளப்படுத்தி, உலக அளவில் உயர்த்தியுள்ள அந்த தாயின் சாமர்த்தியமும், கஷ்டத்தை பொருட்படுத்தாமல் படிக்க வைத்து, ஆளாக்கின அவரது வைராக்கிய மாண்பும் தான்!
ஆம்... இன்று தன் உழைப்பாலும், திறமை மற்றும் தன்னம்பிக்கையாலும் சிகரத்திலுள்ள சீதாராமன் தான், அன்று எட்டாம் வகுப்பு தேர்வுக்காக, ஓட்டமாக ஓடியவர். திரும்ப அந்த கதைக்கு வருவோம்...
அன்று —
கை, கால்கள் மற்றும் உடல் தளர்ந்தாலும், அவனது உள்ளம் தளரவில்லை.
வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக் கொண்டிருந்தவன், பள்ளியை அடைந்த போது, மணி, 10:30; தேர்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அப்போதும் அவன் தளர்ந்து விடவில்லை; நம்பிக்கையை இழக்காமல் தலைமையாசிரியர் அறையை நோக்கி ஓடினான். அழுகையும், பதட்டமுமாக ஓடி, வந்தவனைப் பார்த்த தலைமையாசிரியர், அவனை அமைதிப்படுத்தி அரவணைத்து அழைத்துப்போய் தேர்வு எழுதச் சொன்னார்.
ஓடிவந்த களைப்பில் கை நடுங்க அவன் எழுத ஆரம்பித்தான். தேர்வு நேரம் முடிய ஒரு மணி நேரம் இருக்கும் போதே முழுதாய் எழுதி கொடுத்துவிட்டு, தலைமையாசிரியரிடம் நன்றி கூறி, அழ ஆரம்பித்தான்.
அந்தத் தேர்வில் அவன் நினைத்தபடியே முதலிடம் பெற்றான்; தகுதி அடிப்படையில் விடுதியிலும் இடம் கிடைத்தது.
அவன் எந்த தருணத்திலும், தன் சூழலையோ, வறுமையையோ நொந்து கொண்டதில்லை. இல்லாததை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கவில்லை. இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அவனது தந்தை, அவனுக்கு கற்றுத் தந்திருந்தார்.
சீதாராமனுடைய தந்தை ஒரு சமஸ்கிருத பண்டிட்!
அந்நாட்களில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்து, வெறுப்புடன் இந்தியை விரட்டியடிக்க, இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு வேலையில்லாமல் போனதால், அவரது சம்பாத்யம் பறிபோயிற்று. அதன்பின், அவர் பிழைப்பு தேடி பம்பாய் சென்றுவிட, சீதாராமனுடைய அம்மாவும், பாட்டியும் குடும்பத்தை சுமக்க வேண்டியதாயிற்று.
பாட்டியும், இளம் வயதிலேயே முதுமை அடையும் அளவிற்கு உழைத்து, ஓடாய்ப் போனவர். அம்மாவும், பிள்ளைகளுக்கு கஷ்டம் வரக்கூடாது என, அக்கம் பக்கம் வீடுகளில் வேலைபார்த்து, வயிற்றை கழுவும் நிலைமை. அந்த சூழலிலும் கூட சீதாராமனின் விருப்பத்திற்கும், லட்சியத்திற்கும் அவர்கள் குறுக்கே நின்றதில்லை.
எப்போதும் ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி படிக்க வைத்தனர். சீதாராமனும் வீட்டினரை கஷ்டப்படுத்தாமல், தன்னை விட ஓர் ஆண்டு மூத்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டியூஷன் சொல்லித் தருவார். இதனால், காசுக்கு காசும், அடுத்த ஆண்டுக்கான பாடப் புத்தகங்களும் இலவசமாய் கிடைத்தன. பின்னால் சீதாராமன், பி.காம்., முதலாமாண்டு படிக்கும் போதும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார்.
அத்துடன், அதிகாலையில் எழுந்து, வீடுவீடாய் பேப்பர் போடுவது, ஓட்டல்களில் வேலை, சினிமா போஸ்டர் ஒட்டுவது என, பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கிடையே படித்த சீதாராமன், பி.காம்.,மில் கோல் மெடலிஸ்ட். அதன்பின், சி.ஏ., படிப்பை, தன் சொந்த முயற்சியாலே படித்து முடித்தவருக்கு, ஓமனில் வேலை கிடைத்தது.
அதன்பின், கத்தாரில் நலிவடைந்திருந்த, தோஹா வங்கியின் பொறுப்பை ஏற்று, அதன் உயரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
இயல், இசை, நாடகம் என, அவருக்கு சின்ன வயதிலிருந்தே ஈடுபாடு; படிக்கும் போதே, பெண் வேடம் போட்டிருப்பதுடன், பல குரல் வித்தகர். பொதுவாய் ஒருவர் பெரிய பதவியை வகித்து விட்டாலே, கற்ற கலைகளை விட்டு விடுவர்; ஆனால், சீதாராமன் இதற்கு விதிவிலக்கு. குவைத்திலும் மேடையில், சிவாஜி வசனம் பேசி, அசத்தினார்.
வசதி வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தாமல் வீணாய்ப் போனவர்களுக்கு மத்தியில், 'வறுமையும் கஷ்டமும், படிப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடையல்ல...' என்று நிரூபித்திருக்கும் சீதாராமன், ஒரு முன்னுதாரண தமிழர்; உலக அளவில், இந்தியர்களின் பெருமையை உயர்த்தி பிடித்திருப்பவர். 

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை