சங்கரநாராயணன்!

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, கோவிலுக்கு சென்று, கோமதியம்மன், சங்கரலிங்க சுவாமியுடன் பள்ளியறை ஊஞ்சலில் ஒன்று சேர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு உருகி, கண்ணீர் மல்க வழிபட்டு வருவார் திருநாவுக்கரசு.
'பள்ளியறை தீப ஆராதனைய பாத்துட்டா போதும்... பிறவிப் பயனயே அடைஞ்சுரலாம். இத விட, வாழ்க்கையில நமக்கு வேற என்ன வேணும்...' என்று, கோவிலிலிருந்து வெளி வரும்போது, தன் நண்பர்களிடம் அவர் சிலாகிப்பது உண்டு. ஆனால், வீடு வந்து சேர்ந்ததும், தன் தங்கை கோமதியை முதலில் பார்ப்பதை, மிகக் கவனமாய் தவிர்த்து வந்தார் திருநாவுக்கரசு.
தப்பித் தவறி பார்க்க நேரிட்டு விட்டால், அன்று முழுவதும், அவர் முகம்,'கடுகடு'வென, இருக்கும்.
அவருடைய இந்த, 'கடுகடு'ப்பிற்கு காரணம், கோமதி ஒரு கைம்பெண். அண்ணனின் கண்களுக்கு கூட, அவள் ஒரு அபசகுணமாகவே தெரிந்தாள்.
தங்கை கோமதிக்கு, நல்ல சீர் வரிசையோடு தான், கல்யாணம் செய்து வைத்தார் திருநாவுக்கரசு.
மாப்பிள்ளை ஏற்கனவே, குடியை முதல் தாரமாய் மணந்ததினால், குடித்துக் கும்மாளமிட்டு, கொண்டவளின் கழுத்தில் தாலிக் கயிறை மட்டுமே விட்டு வைத்து, மின்னியதை எல்லாம் கழட்டி விற்று, குடித்துக் கொண்டாடி, ஒரு நாள் போய் சேர்ந்து விட்டான்.
வெள்ளைப் புடவையும், வெறும் நெற்றியும், வெறிச் சோடிய கழுத்துமாய், வீடு வந்த தங்கையை, அடுக்களைக்குள் அனுப்பி வைத்து, அங்கிருந்த தன் மனைவியை வெளியில் மீட்டுக் கொண்டார் திருநாவுக்கரசு.
தங்கைக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க, அவர் விரும்பவில்லை.
'இரண்டாம் தாரமாகக் கட்டினாலும் சும்மாவா கட்டிட்டுப் போவான்... இத்தனை ஆயிரம்ன்னு எண்ணித் தரணும்... இத்தனை பவுனுன்னு நிறுத்துத் தரணும்... எவன் கிட்ட இருக்கு... இருந்துட்டுப் போறா வீட்டோட! அவ தலை எழுத்து அது தான்...' என்று சொல்லி, சொந்தங்களின் வாயை அடைத்தார். இருபத்தி எட்டு வயதுத் தங்கையின் உணர்வுகளையும் துவைத்துப் பிழிந்து, வெள்ளைப் புடவையில் காய வைத்து விட்டார்.
திருநாவுக்கரசருக்கு, நாராயணன் என்றொரு தம்பி; நாலு சக்கர வாகனங்களுக்கு, நாலா வேலையும் செய்யத் தெரிந்தவர். நல்லவர்; யதார்த்தமானவர்; வெகுளி.
தப்புச் செய்பவன் மேல் கோபப்படுவாரே தவிர, அவனை வெறுக்கத் தெரியாத வெள்ளை மனசுக்காரர். ஆனால், குடிப்பழக்கமும், கூடாச் 
சேர்க்கையும் உள்ளவர்.
கண்டித்த அண்ணன் திருநாவுக்கரசுடன் சண்டை போட்டு, சொத்தில் தன் பங்கையும் அண்ணனுக்கே விட்டுக் கொடுத்து, தங்கைக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைக்கச் சொல்லி, வீட்டை விட்டுப் போனவர் தான்.
காரைக்குடியில், ஒரு ஒர்க் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த ஒர்க் ஷாப் முதலாளி, ஒரு காமக்கொடூரன்; ஒரு நாள், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் இல்லாமல், அவளைக் கட்டிப் போட்டு, எங்கேயோ இருக்கும் தன் நண்பர்களுக்கும் போன் போட்டு, வரச் சொன்னான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன், கையிலிருந்த சம்மட்டியால் தன் முதலாளியின் தலையில் ஒரே அடி; ரத்தச் சகதியாக்கி விட்டார்.
அந்தப் பெண் அழுதாள். 'அழாதம்மா... ஒரு நாய் உன்னைக் கடிச்சுக் குதறிட்டதா நினைச்சுக்கோ; மறந்திரு. நல்லவேளை, இந்தச் சம்பவம் என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது; தெரியவும் வேணாம். நீ அழாம வீட்டுக்குப் போ...'என்று கூறி, அந்த ஏழைப் பெண்ணை, அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்த நாராயணன், கோர்ட்டில் சரணடைந்தான். கொடுக்கல் வாங்கல் பகையால், முதலாளியை கொன்று விட்டதாய் சொல்லி, குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனைக் கைதி ஆனான்.
பத்துப் பனிரெண்டு ஆண்டுகள், சிறைக் கைதியாய் இருந்து, நாற்பத்தி இரண்டு வயதில், தற்போது விடுதலையாகி வெளியில் வந்துள்ளான்.
இருபத்தி ஆறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி, காரைக்குடி ஒர்க் ஷாப்பில், அவன் வேலை பார்த்த காலத்தில், விளையாட்டாய் விலைக்கு வாங்கிப் போட்ட நிலம், விடுதலையாகி வெளியில் வந்தபோது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமாய் வரவேற்றது.
தன் அண்ணனுக்கும், தங்கைக்கும் தெரியாத ரகசிய கோடீஸ்வரனாய்த்தான் நாராயணன் வீடு வந்து சேர்ந்தான்.
தங்கை கோமதியை விதவைக் கோலத்தில் கண்டபோது துடித்துப் போனான்.
பத்து வருடங்களாய் தங்கையை கைம்பெண்ணாகவே வைத்திருந்து, அவள் உணர்வுகளை மதிக்காமல், தன் வீட்டு சமையல் மெஷினாகவே பயன்படுத்திக் கொண்ட அண்ணனைக் திட்டினான் நாராயணன்.
''சிலையா இருக்கிற கோமதிய, கோவில்ல பாத்து பரவசப்படுறயே... வீட்ல இருக்கிற கோமதிய வாழ வைக்கணும்ன்னு நினைச்சயா? அந்தக் கோமதிக்கு, தங்கப் பாவாடை சாத்துற நீ, தங்கச்சி கோமதிக்கு வெள்ளைப் புடவை வாங்கித் தந்து வேடிக்கை பாக்கத்தான் அவளுக்கு அண்ணனாப் பிறந்தியா?''என்று கேட்டு, சண்டை போட்டான்.
குடிபோதையில் தன்னுடன் சண்டை போட்ட தம்பியை, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் திருநாவுக்கரசு.
''பதினஞ்சு வருஷமா, ஜெயில் களி தின்னு நாக்குச் செத்துப் போயி வந்த நாயி, எனக்கு உபதேசம் செய்றியா... அவளுக்கு நீயும் அண்ணன் தானடா... அவ்வளவு உறுத்திருந்தா, ஒரு கல்யாணத்த முடிச்சு வை,'' என்றான்.
தன் அண்ணனுக்கு, பதிலடி கொடுப்பது போல், மறுவாரமே, அழகான ஒரு இளைஞனை அழைத்து வந்தான் நாராயணன்.
அந்த இளைஞனின் பெயர் சங்கரன். கோமதிக்கு மாப்பிள்ளையைப் பிடித்து விட்டது.
மறுமாதமே, அண்ணனிடம் ஒரு பைசா கேளாமல், தங்கைக்கு தடபுடலாய் திருமணத்தை நடத்தி வைத்தான். இவனுக்கு எங்கிருந்து, இவ்வளவு பணம் வந்தது என்பது திருநாவுக்கரசுக்கு புரியாத புதிராய் இருந்தது.
கோமதியும் திகைப்பும், வியப்புமாய்த் தான், புதுக்கணவனின் பின்னால் போனாள்.
அவள் புகுந்த வீட்டில், அவள் கணவனைத் தவிர, வேறு யாரும் இல்லை.
அவனும், ஒரு நல்ல வேலையில் இருந்தான். வீடும் கூட புதிதாக கட்டிய வீடாய் இருந்தது. சங்கரனுக்கு பெற்றோர், உடன் பிறந்தவர் என்று எவருமே கிடையாது. அனாதை இல்லத்தில் வளர்ந்து, படித்து, ஒரு வேலைக்கு வந்த பின், இந்த வசதி வந்ததாய், தன் கதைச் சுருக்கம் கூறிய சங்கரன், அவளை சந்தோஷமாகவே வைத்திருந்தான்.
நாராயணன் அடிக்கடி குடிபோதையில், தங்கையின் வீட்டிற்கு வந்து, தங்கையிடம் கஞ்சி வாங்கிக் குடித்து, கண்ட இடத்தில் கையை தலையணையாக்கி, தன்னை மறந்து உறங்குவான்.
வேலைக்குப் போய் வீடு திரும்பும் சங்கரன், நாராயணனைக் கண்டு முகம் சுளிப்பதே இல்லை. பாய் விரித்து தலையணை போட்டு, அவரைப் படுக்க வைப்பான்.
இந்த நிகழ்வை, சில நாட்கள் மட்டுமே அமைதியாய் அனுமதித்து இருந்தாள் கோமதி.
ஒரு நாள், அண்ணன் குடிபோதையில் வீடு வந்தபோது, ''இது என்ன வீடா, சத்திரமா... இப்படி தினமும் குடிச்சுட்டு வர்றீயே... உன்னைப் படுக்க வச்சு, பராமரிக்க இங்க உன் பொண்டாட்டியா இருக்கா... நான், உன் தங்கச்சி மட்டுமில்ல, இன்னொருத்தன் பொண்டாட்டிங்கிற உணர்வுமா இல்லாமப் போச்சு உனக்கு?
''என் புருஷன் எவ்வளவு கவுரவமான மனுஷன்; அவர் பேர்ல மண்ண வாரிப் போடவா இப்படி குடிச்சுட்டு வர்ற... இனிமே இங்க வராத,'' என்று, கையெடுத்துக் கும்பிட்ட தங்கையிடம், தலை குனிந்து தள்ளாடிய நாராயணன், ''இனி வர மாட்டேன்டா கோமதி... வருத்தப்படாத... சந்தோஷமா இருடா...'' என்று செல்லி, தடுமாறி தள்ளாடிச் சென்ற நாராயணன், அதன் பின் வரவே இல்லை.
ஒரு நாள், ஒருவாரம், ஒரு மாதம் என, நாட்கள் ஓடிய பிறகும் நாராயணன் வீட்டுப் பக்கமே வராததன் காரணம் புரியாமல் கலங்கிய சங்கரன், மனைவியிடம் புலம்பினான். அதற்கு கோமதி, ''அவரு இனி வர மாட்டார்; வகையா கொடுத்து அனுப்பிட்டேன்,'' என்று, அண்ணனை விரட்டியடித்த கதையை, பெருமையாய் சொன்னது தான் தாமதம், அவள் கன்னத்தில், ஓங்கி அறைந்தான் சங்கரன்.
''அவர், என் மச்சான் இல்லடி; என் குலதெய்வம். அவரை நான் வணங்கி வழிபட, அவரே கட்டிக் கொடுத்த கோவில்தான் இந்த வீடு,'' எனக் கூறிய சங்கரன், அதன் பின், நாராயணனைப் பற்றிச் சொன்ன விஷயங்களை கேட்டு, ஆடிப் போய் விட்டாள் கோமதி.
''அனாதை இல்லத்துல இருந்த எனக்கு, வேலை வாங்கிக் கொடுத்து, பதினைஞ்சு லட்சத்துல உன் பெயர்ல, உனக்கொரு வீடும் கட்டிக் கொடுத்து, உனக்கு சீர் வரிசை சீதனம் எல்லாமே செய்தவர் அவர், 'இவ்வளவும் நான் செய்ததா, என் தங்கச்சிக்கு தெரிய வேணாம் மாப்ள... அப்பறம் அவ என்னை அண்ணனா நினைச்சு, சகஜமா பழக மாட்டா... ஏதோ தெய்வம் மாதிரி நினைச்சு, உயரத்துல தூக்கி வச்சுருவா. அவ மனசில நீங்க மட்டும் தான் இருக்கணும். அதனால, நீங்களே எல்லாம் செய்ததா இருக்கட்டும். வாயைத் திறக்கவே கூடாது'ன்னு என் வாயை அடச்சுட்டார் அந்த மனுஷன்,'' என்று, சங்கரன் சொல்லி அழுதபோது, கோமதி நிலை குலைந்து, சிலையாய் உட்கார்ந்து விட்டாள்.
''என்னை அறுதலியாவே வச்சிருந்த பெரியவனைக் கூட, நான் இவ்வளவு பேசலியே... எனக்கு மறுபடியும் பூவும், பொட்டும் கொடுத்து வாழ வச்ச தெய்வத்த துரத்தி விட்டுட்டனே,'' என்று, கதறி அழுத அவளை, சங்கரன் தடுக்கவில்லை.
தன் அண்ணன் நாராயணனை, தன் கணவன் சங்கரனோடு சேர்த்துப் பார்ப்பதற்கு, இந்தக் கோமதியும், சங்கரன் கோவில், பால் பண்ணைத் தெருவில், இன்னமும் தவமிருக்கிறாள். ஒவ்வொரு ஆடியிலும், அன்னை கோமதிக்கு, சங்கர நாராயணன் தரிசனம் கிடைக்கிறது. அதே ஊரில், இருக்கும் இந்தக் கோமதிக்கு, இன்னமும் கிடைக்கவில்லை.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை