துஷ்டனைக் கண்டால்...

"இப்ப எனக்கு, 10 ஆயிரம் ரூபா தருவியா, மாட்டியா?'' உறுமலாக வந்தது ரமேஷின் குரல்.
''எதுக்குன்னு சொல்லிட்டு வாங்கிக்கங்க.'' உமாவின் குரலும் உயர்ந்தது.
''என்னடி... சம்பாதிக்கிற திமிரா... நான் நினைச்சா ஒரு நாளைக்கே, 10 ஆயிரம் ரூபா சம்பாதிப்பேன் தெரியுமா?"
ஏதோ சொல்ல வாயெடுத்த உமாவின் கண்களில், ராஷ்மி தென்பட்டாள். கலக்கத்துடன் தன் பெற்றோரை பார்த்துக் கொண்டிருந்த, அந்த பதினோரு வயது சிறுமியை கண்டவுடன், 'டக்'கென்று, வாயை மூடி, உள் அறைக்குச் சென்று, பீரோவிலிருந்து, 10 ஆயிரத்தை எடுத்து வந்து கொடுத்தாள்.
''அவ்வளவு பயமிருக்கட்டும்,'' என்று கூறியபடியே, உமாவின் கையிலிருந்த பத்தாயிரம் ரூபாயை பிடுங்கி, பாக்கெட்டில் திணித்தபடி, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை உதைத்து பறந்தான் ரமேஷ்.
''ராஷ்மி கண்ணா... லஞ்சுக்கு, உனக்கு பிடிச்ச புதினா சாதமும், உருளைக் கிழங்கு வறுவலும் பாக்ஸ்ல வச்சுருக்கேன்; எடுத்துகிட்டு கிளம்புடா,'' என முடிப்பதற்குள், பள்ளி வாகனத்தின், 'ஹாரன்' சத்தம் கேட்டது.
கிளம்பிய ராஷ்மியுடன் வாசல் வரை கூடவே வந்த உமா, ''ராஷ்மி... நீ ஸ்கூல் விட்டு வந்தவுடன், சமையலறை மேடை மேலே, ஒரு பாட்டில்ல மாங்காய் தொக்கு வைச்சிருக்கேன். அத பக்கத்து வீட்டு அருணாச்சலம் அங்கிள் கிட்ட கொடுத்துடு,''என்றாள்.
''போம்மா... அதெல்லாம் என்னால முடியாது; நீயே கொடுத்துக்கோ.'' வேகமாய் வந்து விழுந்தன, வார்த்தைகள்.
''அப்படி சொல்லக் கூடாதும்மா; பாவம் அந்த அங்கிள். அவங்க வீட்டு ஆன்ட்டி, உடம்பு முடியாம இருக்காங்க இல்ல... அதான் கொஞ்சம் கொடுத்துடும்மா.''
பதில் சொல்லாமல், வேனில் ஏறி கை அசைத்தாள் ராஷ்மி.
ராஷ்மியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்காரி அஞ்சலையின் உதவியோடு மற்ற வேலைகளை அவசர அவசரமாய் முடித்து, கதவைப் பூட்டி, பஸ் ஸ்டாண்டுக்கு ஓடி, பஸ் பிடித்து, அவள் வேலை பார்க்கும், அந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்குள் நுழையும் போது, பத்து நிமிடம் தாமதமாகி விட்டது. கேஷ் கவுன்ட்டரின் முன், அப்போதே அனுமார் வால் மாதிரி நீளமான க்யூ. அவசர அவசரமாக கவுன்ட்டருக்குள் நுழைய, அங்கே வாடிக்கையாளரை சமாளிக்க அமர்த்தப்பட்டிருந்த அவள் அலுவலக தோழி எழுந்து கொள்ள, மனதை ஒருமுகப்படுத்தி, வேலையில் மூழ்கினாள் உமா.
கூட்டம் ஒரு வழியாக குறைந்தபின், மேஜை மேல் வைத்திருந்த மொபைல் போனின் மேல், அவள் கவனம் சென்றது. மூன்று மிஸ்டு கால், ஒரே எண்ணிலிருந்து வந்திருந்தது. வேலை நேரத்தில் கவனம் கலையக் கூடாது என்பதற்காக, மொபைலை வைப்ரேஷன் மோடில் வைத்திருந்ததால், மொபைல் அழைப்பை கவனிக்கவில்லை. 'புது எண்ணாக இருக்கிறதே... யாராக இருக்கும்? ஏதாவது, முக்கியமான விஷயமாகத் தான் இருக்க வேண்டும்; இல்லை என்றால், இத்தனை முறை முயற்சி செய்திருப்பார்களா...' என நினைத்து, அந்த நம்பருக்கு போன் போட, இரண்டு ரிங் போவதற்குள் போனை எடுத்த ஒரு பெண், ''மிசஸ் உமா... நான் ராஷ்மியோட கிளாஸ் மிஸ் பேசறேன்,'' என்று கூற, உமாவிற்கு வியர்த்துக் கொட்டியது.
''ராஷ்மிக்கு என்ன?'' என்றாள் பதட்டத்துடன்.
''ராஷ்மியைப் பத்தித்தான் உங்கக் கிட்ட கொஞ்சம் பேசணும்; கொஞ்கம் ஸ்கூலுக்கு வர முடியுமா?'' என்று மென்மையாக கேட்டாள் ஆசிரியை.
''இன்னும் ஒரு மணி நேரத்துல மதிய உணவு இடைவேளையில, உங்கள வந்து பாக்கிறேன்,'' என்றாள்.
''நீங்க நேரே ஸ்டாப் ரூமுக்கு வந்துடுங்க; நீங்க வர்றது ராஷ்மிக்கு தெரிய வேணாம்,'' என்றாள்.
உமாவிற்கு, 'படபட'ப்பாக இருந்தது. நேரே தன் அலுவலக தோழியிடம் போய் நடந்ததைக் கூற, அவள், ''பயப்படாத உமா, அவளுடைய படிப்பு பத்தி ஏதாவது சொல்றதுக்கு தான் கூப்பிட்டிருப்பாங்க; போயிட்டு வா,'' என்று கூறினாள்.
மதிய உணவு நேரத்தில், ஆட்டோவில் கிளம்பினாள் உமா. ஆசிரியை கூறியபடி ஸ்டாப் ரூமை அடைந்து, ஆசிரியையை பார்த்தாள்.
''மிசஸ் உமா, ராஷ்மி ரொம்ப புத்திசாலி பொண்ணு; ஆனா கொஞ்ச நாளா அவ சரியா படிக்க மாட்டேன்றா. முதல் யூனிட் டெஸ்ட்டுல, 90 சதவீதம் மார்க் வாங்கியவ, இப்ப ரெண்டாவது யூனிட் டெஸ்ட்டுல, எல்லா பாடத்துலேயும், 50 சதவீதம் தான் எடுத்திருக்கா. சமீபகாலமா அவளை கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்... அவ பாடத்தை கவனிக்காம ஏதோ யோசனையிலயே இருக்கா; யார் கூடவும் கலகலப்பா பேசறது இல்ல. ஏதோ பயத்துல இருக்குற மாதிரியே இருக்கா; அதான் உங்கள வரச் சொன்னேன்.
''அவளுக்கு ஏதோ சொல்ல முடியாத பிரச்னை இருக்குன்னு நினைக்கிறேன்; அது வீட்டுலயா, வெளியிலயான்னு கவனிங்க. ஸ்கூல பொறுத்த வரை அவளுக்கு எந்த பிரச்னையும் இல்ல; அது எனக்கு நல்லாத் தெரியும். எதுவா இருந்தாலும், அதை சீக்கிரம் கண்டுபிடிச்சு சரி செய்யுங்க. அவளுக்கு உடல் ரீதியா எந்த பிரச்னையும் இருக்கான்னும் பாத்துக்கங்க. உங்க பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு; அவ படிப்பு கெட்டுறக் கூடாதுங்கிற அக்கறையில தான் உங்கள கூப்பிட்டேன்,''என்றாள்.
''ரொம்ப நன்றி மிஸ்; நான் பாத்து சரி செய்துடறேன்,'' என்று கூறி, விடை பெற்றாள் உமா.
பள்ளியிலிருந்து திரும்பி வரும் போது, வழியெல்லாம் அதே சிந்தனை. 'ஏன் ராஷ்மி இப்படி இருக்கா... அவளுக்கு என்ன பிரச்னை...' என்று யோசித்தவளுக்கு, அவளின் நினைவுகளில், கடந்த கால வாழ்க்கை உருண்டோடியது...
உமா பி.காம்., முடித்து, அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், வீட்டில் அவளுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தனர்; அப்போது வந்த வரன் தான் ரமேஷ். ரமேஷ் எம்.பி.ஏ., முடித்திருந்தான்; தன் நண்பனுடன் சேர்ந்து ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி, கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தான். இவர்கள் திருமணம் முடிந்த மூன்றாவது மாதத்திலேயே உமாவிற்கு வங்கி வேலை கிடைத்து விட்டது. முதல் சில ஆண்டுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றது.
அவர்கள் திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, ரமேஷின் பார்ட்னர் அவனை ஏமாற்ற, பிசினசில் பெரிய அடி. அதற்கு பின், வேறு ஏதாவது வேலை தேடச் சொன்னால், 'அடுத்தவர்களிடம் என்னால் கை கட்டி வேலை பாக்க முடியாது...' என்று கூறி, அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை ரமேஷ்.
வேறு தொழில் துவங்க கூறினால், 'அதிக முதலீடு உள்ள தொழிலை தான் துவங்குவேன்...' என்று கூறி, அகல கால் வைக்க முயன்று, அந்த முயற்சிகளும் தோற்றன.
பின், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சீட்டு பிடித்து, அதில் சிலர் சரியாக கட்டாமல் போக, மறுபடியும் நஷ்டம்; அந்த தொழிலுக்கும் மூடு விழா.
'வேறு ஏதாவது முயற்சிக்கக் கூடாதா?' என்று கேட்டால், 'எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா... யாருக்காக நான் பணம் சேர்க்கணும்...' என்பான்.
இப்படியாக திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் கழித்து, தவமா தவமிருந்து பிறந்தவள் தான் ராஷ்மி.
ராஷ்மி பிறந்தவுடன், உமா வேலை செய்யும் பேங்கிலேயே லோன் ஏற்பாடு செய்து, ஒரு டீ.டி.பி., சென்டர், ஜெராக்ஸ் மெஷின் எல்லாம் போட்டு, ஒரு கடை வைத்தான் ரமேஷ்; கணிசமான வருமானம் கிட்டியது.
ஆனால், ரமேஷுக்கு மனைவி தன்னை விட அதிகமாக சம்பாதிக்கிறாள் என்ற தாழ்வு மனப்பான்மை. 
கடந்த ஓர் ஆண்டிற்கு முன், ரமேஷின் பெற்றோர், ஒருவர் பின் ஒருவராக காலமாக, ரமேஷுக்கு புதிதாக குடிப்பழக்கமும் வந்து சேர்ந்தது. முதலில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் குடித்துக் கொண்டிருந்தவன். இப்போது, தினமும் இரவு குடித்து விட்டு தான் வீட்டிற்கு வருகிறான்.
இன்று காலை, ரமேஷ், உமாவிடம் 10 ஆயிரம் ரூபாய் கேட்டதே... நண்பர்களுடன் சேர்ந்து குடித்து, கும்மாளமிடத் தான். ரமேஷின் குடிப்பழக்கம் மற்றும் பொறுப்பின்மையால் தான், அவர்களுக்குள் சண்டை வருவதே!
ஆனால், கூடிய வரை தங்கள் சண்டையை, ராஷ்மி எதிரில் வைத்துக் கொள்ள மாட்டாள் உமா.
மாலை, உமா வீட்டை அடைந்த நேரம், ரமேஷ் வெளியில் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான். ராஷ்மி உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் படுத்திருந்தாள்.
''என்ன ராஷ்மி... ஸ்கூல் விட்டு வந்தவுடன் படுத்துட்டே?''
''ரொம்ப சோர்வா இருக்கும்மா,'' என்றாள்.
''சரி வா... டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம்.''
''இல்லம்மா... கொஞ்ச நேரத்துல சரி ஆயிடும்.''
வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த ரமேஷை தனியாக அழைத்து, பள்ளியில் நடந்த விஷயங்களை கூறினாள் உமா. ரமேஷின் முகம் இருண்டது.
''முதல்ல உங்க குடிப் பழக்கத்த விடுங்க; அதனால பணம் செலவாகுறது மட்டுமல்லாம, உங்க உடம்பும் கெடுது; நமக்குள்ள சண்டையும் வருது. இப்ப பாருங்க, ராஷ்மிக்கு என்ன பிரச்னைன்னு கூட நமக்குத் தெரியல,''என்றாள்.
''எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற? ராஷ்மிக்கு உடம்பு சரியில்லன்னா அதை நீ தான் பாக்கணும்; நான் என்ன பைசா செலவழிச்சா குடிக்கிறேன்... பக்கத்து வீட்டு அருணாச்சலம் கம்பெனி குடுங்கன்னு கூப்பிடதுனால போறேன்; எனக்கு ஒரு பைசா செலவில்ல புரிஞ்சுக்கோ,''என்றான்.
பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து, 50 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றவர் அருணாச்சலம். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி, அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டனர்.
அருணாச்சலத்தின் மனைவிக்கு இதய பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது முடியாமல் படுத்து விடுவாள்.
மனைவியின் உடல் நிலை சரியில்லாததாலும், தனிமையினாலும் அவர் தினமும் மது அருந்துவார் என்பது யாருக்கும் தெரியாது; இப்போது, ரமேஷ் கூறித் தான் உமாவிற்கே தெரியும்.
குடும்ப டாக்டரிடம், ராஷ்மியை அழைத்துச் சென்றனர். அவர் பரிசோதித்து பார்த்து, ''எல்லாம் நார்மலாத்தான் இருக்கு; ஆனாலும், நீங்க மனநல டாக்டரையும் கொஞ்சம் பாத்திருங்க,'' என்று கூறி, நகரின் பிரபல மனநல மருத்துவருக்கு கடிதம் எழுதிக் கொடுத்தார்.
மறுநாள் காலை, மூவரும் மனநல மருத்துவரை சென்று பார்த்தனர். பொதுவான கேள்விகளுக்கு பின், அவர்களை வெளியே அமர வைத்த டாக்டர், முக்கால் மணி நேரம், ராஷ்மியிடம் தனியாக பேசினார். அது முடிந்து, இவர்களை உள்ளே அழைக்க, ராஷ்மியின் முகத்தில் கண்ணீர். உமா, ரமேஷ் இருவர் உள்ளங்களும் பதைத்தன.
''ராஷ்மி, நீ போயி முகத்த கழுவிட்டு வா,'' என்று, அவளை வெளியே அனுப்பிய டாக்டர், ''உங்க பொண்ணு, இப்ப பருவம் அடைவதற்கு முந்தைய நிலையில இருக்கா; இந்த சமயத்தில் சில பெண்களுக்கு மன ரீதியா சில குழப்பங்கள், பயம் வரலாம். இது இயல்பான உடல் மாற்றம்ன்னு நீங்க தான் அவளுக்கு புரிய வைக்கணும்.
''அப்புறம்... நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுக் கிட்டு இருக்கறதா குழந்தை சொல்றா; உங்க சண்டையால அவ மனசு பாதிக்கப்பட்டிருக்கு.
''இன்னொரு முக்கியமான விஷயம்... உங்க பக்கத்து வீட்டுல இருக்குற அருணாச்சலங்கிறவர், உங்க பொண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கான்; அதை உங்க கிட்ட சொல்ல அவ பயந்திருக்கா. வளரும் பெண் குழந்தைகள, பெத்தவங்க தான் கவனமா பாத்து, அவங்க நடவடிக்கையில, ஏதாவது திடீர் மாற்றம் தெரிஞ்சா, பக்குவமா விசாரிக்கணும். உங்க பொண்ணு இயல்பிலேயே புத்திசாலி; அதனால தான் அந்த அருணாச்சலத்துகிட்டே இருந்து, அவளே தன்னை காப்பாத்திக்கிட்டிருக்கா. ஆனா, அவளுக்கு மனசுல எப்ப, என்ன நடக்குமோன்னு திகில். அதனாலயே இயல்பா இருக்க முடியாம தத்தளிச்சிருக்கா; இனிமேலாவது, அவளை பத்திரமா பாத்துக்குங்க,'' என்றார்.
வீடு செல்லும் வரை அமைதியாக இருந்த ராஷ்மி, ''அம்மா... முன்னெல்லாம் அப்பா தான் எனக்கு பாடம் சொல்லி தருவாரு; ஆனா இப்ப எல்லாம், 'எனக்கு வேலை இருக்கு, நீ அருணாச்சலம் அங்கிள் கிட்ட கத்துக்க'ன்னு சொல்றாரு; நான் அவர்கிட்ட பாடம் படிக்கப் போனப்போ அவர், என் கையை பிடிச்சு இழுத்து, முத்தம் தர சொன்னாரு; நீ எனக்கு முன்னாடியே, 'குட் டச், பேட் டச்' பத்தி சொல்லிக் குடுத்ததுனால, நான் கையை உதறிட்டு ஓடிவந்துட்டேன். அப்பாகிட்ட 'அந்த அங்கிள் கிட்ட கத்துக்க பிடிக்கலப்பா; நீங்களே சொல்லிக் குடுங்க'ன்னு சொன்னா... அவரு அத காதுலயே வாங்கிக்கல. இதப் பத்தி உன்கிட்ட சொன்னா நீ அப்பாவ ஏதாவது கேட்டு, உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வரும்ன்னு தான் இதப்பத்தி உங்ககிட்ட சொல்லல,'' என்று கூறி, விசும்பினாள் ராஷ்மி.
மனம் துடிக்க உள்ளறைக்கு சென்று, பெரிய சூட்கேஸில் தன் உடைகளையும், ராஷ்மி உடைகளையும் அடைத்து சூட்கேஸை மூட, ரமேஷ் ஓடிச் சென்று, அதை பிடுங்கி அருகில் வைத்தான்.
''உமா... நான் திருந்திட்டேன்; இனி சத்தியமா குடிக்க மாட்டேன். எப்படா குடிக்க போவோம்ன்னு, அதையே நினைச்சுக்கிட்டு இருந்ததினால தான், அவளுக்கு சாயங்காலம் பாடம் சொல்லித் தரத நிறுத்தினேன். நானும், அந்த படுபாவியும் குடிக்கும்போது, அவன் ராஷ்மிக்கு பாடம் சொல்லி தர்றதா சொல்லி, அனுப்பி வைன்னு சொல்லும்போது, போதையில அவனப் பத்தி தெரிஞ்சுக்காம போயிட்டேன். இனி ஒழுக்கமா, பொறுப்பா இருக்கேன்; நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டு போயிடாதீங்க,''என்றான்.
''அந்த சண்டாளன் இருக்குற வீட்டுப் பக்கத்துல இருக்கறத கூட நான் விரும்பலைங்க; துஷ்டனைக் கண்டா தூர விலகணும். நான் எங்க அம்மா வீட்டுல இருக்கேன்; நீங்க வேறு வீடு பாத்துட்டு என்னை கூப்பிடுங்க; நாங்க வரோம்,'' என்று கூறிக்கொண்டிருந்த போது, ''அதுக்கு அவசியமில்லக்கா...'' என்றபடி வீட்டிற்குள் நுழைந்தாள், அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அஞ்சலை.
''நீங்க நேத்து காலையில, ராஷ்மி கிட்ட, பக்கத்து வீட்ல ஊறுகா பாட்டில கொடுக்கச் சொன்னவுடன் ராஷ்மி எடுத்தெறிஞ்சு பேசும் போதே எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு. சாயந்திரம் அவ ஸ்கூல்ல இருந்து வந்ததும் கேட்டேன்... எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டா. உடனே நேர எங்க அண்ணாத்தை கிட்ட போய் சொல்லி, கையோடு இட்டாந்தேன். அண்ணாத்தை, அந்த படுபாவியை ரெண்டு அடி போட்டதிலேயே உண்மையை ஒத்துக்கிட்டு, காலில் விழுந்து, 'சத்தம் போட்டு, ஊரைக் கூட்டாதப்பா, எனக்கு ஒரு வாரம்,'டைம்' குடு; அதுக்குள்ள வீட்டை காலி செய்துட்டு போயிடுறேன்'னு சொன்னான்,'' என்றாள்.
''ரொம்ப நன்றி அஞ்சலை,'' என்ற போது அவள் குரல் தழுதழுத்தது.
''இதுல என்னக்கா இருக்கு? இந்த மாதிரி துஷ்டனைக் கண்டால் தூர விலகக் கூடாதுக்கா; அங்கேயே நசுக்கி போடணும். இல்லைன்னா அவன் இன்னொருத்தர் கிட்ட, இதே மாதிரி தன் லீலைகள தொடருவான்,'' என்றாள் ஆக்ரோஷமாக.
படிப்பறிவில்லாதவளாக இருந்தாலும், தன் அனுபவ அறிவால், பிரச்னையை எளிதாக தீர்த்த அஞ்சலையின் உருவம், உமாவின் உள்ளத்தில் விஸ்வரூபமாக நின்றது.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை